விமானத்தில இருந்து இறங்கி ஏர்போர்ட்டுல கால வைக்கும் போதே உடம்பு சிலிர்த்தது. என்ன தான் வெளிநாட்டுல ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சாலும், சுத்தம், நல்ல காத்து, வசதியான வாழ்க்க, ஐ போனு, காஸ்ட்லி காருனு வாழ்ந்தாலும் இங்க வந்து... இந்த மண்ண மிதிக்கிறப்ப வர்ற சந்தோசம்... அட அடா... அத அனுபவிச்சா தான் புரியும்...

விமானத்திலிருந்து இரயிலு... இரயில்ல இருந்து பஸ்சு... பஸ்சுல இருந்து ஆட்டோனு அலஞ்சு வந்தாலும் நம்ம மண்ண மிதிக்கும்போது எதுக்கு இந்தக் கண்ணு கொடங் கொடமா நம்மள அறியாம வழியுதுனு தெரியல. அங்குல அங்குலமா அலஞ்சு திரிஞ்ச இந்த ஊரு இப்ப ஏதோ வெறுமையா தெரியுது. ஆனா இந்த வயலும் பம்பு செட்டுத் தண்ணியும்... என்னமோ இருக்கு இந்த ஊருல. வூடு இருக்கத் தெருவுல நுழையும்போதே விசாரிப்பு பூரிக்க வைக்குது.

"என்னா... செல்வம் எப்படி இருக்க..."

"மணி அண்ணே..! நல்லா இருக்கேன். நீங்க எப்புடி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேனப்பா. உங்க அப்பன் சாதிச்சுப்புட்டான் பாரு. பாரின்ல இருந்து புள்ள வருதுனு ஒரே அலப்பற. போ... போயி அவனப் பாரு".

"அடேய் செல்வம்... வாடா இப்பதான் வரியா ? உடம்பு போட்டுபுடுச்சு."

"ஆமா அத்த நல்ல சாப்பாடு... அதுனால தான்"

"அங்க பாரு உங்க அம்மா ஓடியாருது..."

"அய்யா... எஞ் செல்வமே... எங்கண்ணுக்குள்ளயே இருக்கியே சாமி... மூனு வருசமாச்சு உன்ன பாத்து..."

அம்மாவோட வாசன. இந்த ஊரோட வாசன. என்ன செய்யுறது காசு, பணம் சம்பாரிக்கனுமே. இரண்டு வருசத்துல சம்பாருச்சுட்டு வந்துடலாமுன்னு தான் நெனச்சுப் போனேன். இன்னையோட ஏழு வருசமாச்சு. இதோட முடிதானு தெரியல. தேவை மட்டும் கொறையவே மாட்டுது. புதுசு புதுசா செலவுதான் வருது. இந்த மண்ணுல மறுபடியும் அப்பா-அம்மாவோட சேந்து வயலு வூடுனு வாழ முடியுமானே தெரியல.

அம்மா வச்ச மீன் கொழம்பு வாசன உள்ள நுழையும்போதே ஆள தூக்கிடுச்சு. நம்ம ஊரு வாயிக்கா தண்ணில குளிச்சு எம்புட்டு நாளாச்சு.

"அடே செல்வம்... துண்ட தூக்கிட்டு எங்க போற. இப்ப தான் நம்ம வூட்டுலே பாத்துரூமு கட்டியாச்சுல. அதுல குளி".

"இல்லமா என்ன இருந்தாலும் நம்ம வாய்க்கா தண்ணில குளிக்கிறது மாதிரி வருமா "

"நீ நெனைக்கிறாப்புல இப்ப தண்ணி இல்ல. மாடு மூத்திரம் பேஞ்சாப்புடி ஒழுகிட்டுதான் இருக்கு. அதுல குளிக்க முடியாது. இங்கையே குளிச்சுட்டு சாப்புட்டு. பொழுது சாயப் போயி வாய்காலப் பாரு".

அம்மா சமையல சாப்பிட்டு திண்ணையில படுத்து வெத்தல போடுற சுகமே தனி தான். மதிய வெயிலு ஆளு அரவமில்லாத நேரம். கண்ண சொருகிட்டு இருந்தப்ப தூரத்துல முதுகு நெறைய ஒரு பெரிய மூட்டையோட நடக்க முடியாம தள்ளாடி ஒருத்தர் நடந்து வந்தாரு. அவரு தானா அது என்ற சந்தேகம் வர, யாருனு உத்துப் பார்த்தேன். அது... அவரே தான்... ரவிக்கைக் காரு. அவரு பேரு என்னன்னு யாருக்குத் தெரியும். இந்தக் கிராமத்துக்கு டவுனுல இருந்து ரவிக்கையும், சேலையும் வாங்கிட்டு வந்து விக்கிறது தான் அவரு பொழப்பு. எனக்கு வெவரம் தெரிஞ்ச நாளா ஒரு சைக்கிள் கூடக் கிடையாது. நடந்தே வருவாரு நடந்தே போவாரு. முதுகு நெறைய மூனு ஆளு சுமக்க வேண்டிய துணிய அவரு ஒருத்தரே சுமப்பாரு. கிட்டதட்ட பதினஞ்சு வருசமா அதே வேலைய இன்னமும் செய்ராரு. எந்த முன்னேற்றமும் இருக்கிறதா தெரியல...

அதுல எங்க அம்மா சேலைய டவுனுல வாங்கும், ரவிக்கைய இவருகிட்ட வாங்கும். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... ஒரு ரவிக்க முப்பது இல்ல நாப்பது ரூபானு குடுப்பாரு. அத யாரும் முழுசா காச குடுத்து வாங்க மாட்டாங்க, எங்க அம்மா உட்பட. வாங்கும்போது ஒரு ஐஞ்சோ பத்தோ குடுப்பாங்க. மீதிய வார வாரம் வந்து வாங்கிட்டுப் போவாரு. அப்பல்லாம் எங்கம்மா ஒரு தடவ வரும்போது அதிகபட்சம் ரெண்டு ரூபா தரும். ஒரு சில வாரம் அதுவும் இல்லைனு சொல்லிடும். ஆனா அவரு கொஞ்சம் கூட மனசு கோணாம சரிமா அடுத்த வாரம் வர்ரேனு சொல்லிட்டுப் போயிடுவாரு. அவரு ஒவ்வொரு வாரம் வரும்போதும் இதே மாதிரி மூட்டைய தூக்கிட்டு தான் வருவாரு. அந்த வேகாத வெயிலுல அவரு அப்படி வர்றதப் பாக்கவே பாவமா இருக்கும். நான் கொஞ்சம் பெரிய பையனா ஆனதுக்கப்புறம் எங்கம்மா கிட்ட இவருக்காகப் பேசினது இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு...

"ஏம்மா அவர இப்படிக் கஸ்டப்படுத்துர. அவருக்கு எவ்வளவு குடுக்கனும்".

"அது ஒரு பத்து ரூபா இருக்கும்".

"அத மொத்தமா தான் குடுத்துறேன்மா ".

"அவரு எனக்கு மட்டும் இல்ல எல்லாத்துக்கும் வாங்க வருவாரு."

"எல்லாரும் இப்புடியே நெனைச்சா என்னமா அர்த்தம். நீ குடுக்க வேண்டியத குடுத்து விடேன்மா "

"அடேய்... அவரு அதெல்லாம் ஒன்னும் நெனைக்க மாட்டாரு. நீ செவனேனு இரு.." அப்புடினு வாய அடைச்சுடும் எங்கம்மா.

நான் அப்பவே தீர்மானிச்சேன் நம்ம சம்பாதிக்க ஆரம்பிச்சதும் இவருக்கு ஏதாவது செய்யனும்னு. அவரு ஒவ்வொரு வீடா முடிச்சுட்டு எங்க வீட்டுக்கு வந்தாரு.

"என்ன செல்வம் எப்படி இருக்க..."

"நான் நல்லா இருக்கேன். எங்க அம்மா உங்களுக்கு ரவிக்கக் காசு குடுக்கனுமா என்ன?"

"ஆமா செல்வம்... அம்மா இல்ல?"

"இருக்காங்க... உக்காருங்க கூப்புடுறேன்"

என் பர்சை எடுத்துட்டு வர்றதுக்குள்ள, எங்கம்மா அவருக்குக் குடிக்க மோரக் குடுத்து ஏதோ பேசிட்டு இருந்துச்சு. நான் வெளிய வரும் போது கையில ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிடுச்சு.

"ஏம்மா இன்னமும் எவ்வளவுமா அவருக்குத் தரனும்".

"ஒரு முப்பது ரூபா இருக்கும்"

"ஏன்மா இப்படி"ன்னுட்டு... பத்து எட்டு தாண்டி அடுத்த வீட்டுக்குள்ள நுழையப் போன அவருக்கிட்ட ஓடிப்போயி நூறு ரூபாயக் குடுத்தேன். அவர் "அம்மா குடுத்துட்டாங்க தம்பி"ன்னாரு. நான் பரவாயில்லை இத புடிங்க அப்படினு அவரு கையில வச்சுட்டு திரும்பும் போது அவரு கூப்பிட்டு, "தம்பி அம்மா எனக்கு முப்பது ரூபா தான் தரனும். இந்தா மீதி"னு எழுபது ரூபாயக் கொடுத்தாரு. "பரவாயில்ல இருக்கட்டும்"னு சொன்னேன். உடனே அவரு "எதுக்குத் தம்பி ஏங்கிட்ட இருக்கனும்"னு கேட்டாரு.

எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியாம, "அடுத்து அம்மா வாங்கும் போது கழிச்சுக்கிடலாம்"னு சமாளிச்சேன்.

"அது சரியா வராது தம்பி"னுட்டு மீதிய என் கையில அழுத்திட்டு அடுத்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாரு.

அன்னைக்குச் சாயங்காலமா ஊரு தலைவரு வீட்டுக்குப் போனோம். எல்லாம் பேசிட்டுக் கிளப்பும்போது அவுங்க ஒரு தட்டுல குங்குமம், ஒரு ரவிக்கத் துணி, அப்புறம் ஒரு மஞ்சக் கயிறும் வச்சு குடுத்தாங்க. அது ஒரு வழக்கமாம். எனக்கு அந்த ரவிக்கக் காருக்கு ஒதவ ஒரு யோசனை பொறி தட்டுச்சு. வீட்டுக்கு வந்ததும் எங்க அம்மாகிட்ட கேட்டேன்...

"ஏம்மா... நம்ம வூரு தலைவரு வூட்டுல குடுத்த மாதிரி நாமலும் வர்றவங்களுக்குக் குங்குமம், ரவிக்க, மஞ்சக் கயிறு குடுக்கலாம். நீ அந்த ரவிக்கக் காரு கிட்ட ஒரு முப்பது நாப்பது ரவிக்க வாங்கு. நான் மொத்தமா காசக் குடுத்துடுறேன்".

"டேய்... அந்த ஆளு டவுனுல இருந்து வாங்கிட்டு வர்றதால கொஞ்சம் கூட வச்சு விப்பாரு. நாம மொத்தமா வாங்குறதுனா வேணா டவுனுக்குப் போயி வாங்கிட்டு வந்துடலாம்."

" ??????!!!!!!!!......."

எனக்குத் தல சுத்திடுச்சு...

- பா.ஏகரசி தினேஷ்

Pin It