மகேசுக்கு அடிவயிறு சுருக் சுருக்கென வலிக்க ஆரம்பித்து, மேல்வயிற்றுக்குப் பரவியது. கால்களை இறுக ஒட்டி நின்று வயிற்றுத் தசைகளை இழுத்துப் பிடித்தும் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள். மூச்சை பலமாக இழுத்து நெஞ்சுக்கூட்டுக்குள் நிறுத்தினாள். கண்களை அகல விரித்து மனதை சிறுநீர்ப்பைக்கு வெளியே கொண்டு வர முயன்றாள். எங்கே அனைத்தையும் மீறி சிறுநீர் வழிந்து விடுமோ என்று நினைக்கவும், அவளை அறியாமல் அவளது முகம் சற்றே விகாரப்பட்டுப் போனது. எதிரே ஆய்வாளர் காதில் பொருத்திய வாக்கிடாக்கியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். தன்னுடைய இரு பக்கத்திலும் கதிர்வேலுவும் சுப்ரமணியும் கையில் லத்தியை இருகப் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். சற்றே தலையை நீட்டி கதிர்வேலுவுக்கு அடுத்ததாக நின்றிருந்த பிலோமினாவைப் பார்த்தாள்..

"அக்கா”... என மெதுவாக அழைக்கவும் பிலோமினா கிசுகிசுப்பாக கேட்டாள்..

"என்னடி?”

பக்கத்தில் நின்றிருந்த கதிவேலுவுக்கு கேட்கக் கூடாது என்பதற்காக கண்களாலேயே பேசினாள்.

"முடிலக்கா.."

பிலோமினாவுக்குப் புரிந்தது.

'கொஞ்சம் பொறு இந்த காடாயன் இப்போ போயிருவான்' என்று கண்களினாலேயே ஆய்வாளரைக் காட்டிச் சொன்னாள்.

மகேஸுக்கு இப்போது வலி வயிறு முழுவதும் பரவி இருந்தது. மதியம் 12 மணிக்கு பேடை மாற்றும்போது மூத்திரம் கழித்தது. இப்போது மணி மாலை ஆறு. மாதாந்திர நசநசப்போடு வயிற்றில் சேகரமாகியிருந்த சிறுநீர் அவளை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. கட்சி கூட்டப் பாதுகாவல் பணியென்று நேற்று ஆய்வாளர் சொன்னபோது இப்படி வனாந்தரத்தில் மேடை போட்டு நடத்துவார்கள் என்று இவளுக்குத் தெரியவில்லை. சென்ற முறை மாநாடு போட்டபோது கூட தற்காலிக கழிப்பறை கட்டி இருந்தார்கள். இவளைப் போன்ற பெண் போலீசுகளுக்கு தொல்லையில்லாமல் இருந்தது. ஒதுங்குவதற்கு ஒரு மரமில்லாமல் வழியெங்கும் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி இருந்தார்கள். அதைத் தாண்டி ஒரே பொட்டல் காடு. ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள் பாட்டிலை திறந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். பத்தடிக்குப் பத்தடி ரோட்டின் இரண்டு பக்கமும் பெரிய பேனர் வைத்திருந்தார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் கிழித்துவிட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி ஒவ்வொரு பேனருக்கும் ஒரு போலீஸை பாதுகாப்புக்குப் போட்டிருந்தார்கள்.

சாயங்காலம் 4 மணியிலிருந்து ஈரம் கசியும் பேடை மாற்ற வேண்டுமென்று தவியாய்த் தவித்தாலும் ஒரு சிறு மறைப்பு கூட மகேசின் கண்ணுக்குப் படவில்லை. இதே டவுனில் டியூட்டி போட்டிருந்தால் அருகிலிருக்கும் வீடுகளிலாவது அனுமதி கேட்டு பாத்ரூம் யூஸ் பண்ணி இருக்கலாம். கெரகத்த இங்க டியூட்டி போட்டு உசுர வாங்குறானுங்க.. இந்த நாசமாப் போன அரசியல் தலைவரும் இன்னும் வந்து சேரல. கடுப்பில் ஷூ காலால் தரையை பலமாக உதைத்தாள்.

"என்ன மகேசு ரொம்ப நேரம் ஏதோ தவியாத் தவிக்கிற மாதிரி இருக்கு. உடம்பு கிடம்பு சரி இல்லியா?” கதிர்வேலு கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே.. ரொம்ப நேரம் நின்னுட்டு இருக்குறது காலு கொஞ்சம் வலிக்கிது அவ்ளோ தான்...”

"தலைவரு பக்கத்துல வந்துட்டாரு போல. இன்ஸு பேசிட்டு இருந்தாரு. அவரு மேடைக்கு போனவுடனே ரெஸ்ட் எடுத்துக்கலாம் கொஞ்சம் பொறுத்துக்க..”

"எங்கண்ணே ரெஸ்ட் எடுக்க.. அந்தாளு மேடைக்கு வந்து பொன்னாடை போத்தி வட்டம் மாவட்டம் தோலான் துருத்தி எல்லாம் பேசி முடிச்சு இந்த ஆளு பேச ஆரம்பிக்கவே ஒம்பது ஒம்பதரை ஆயிடும்.. அந்த ஆளு கெளம்பிப் போற வரைக்கும் நம்மள ஒரு இன்ச் கூட இன்ஸ்ஸு நகர விடமாட்டாரு.. என்ன பொழப்போ..”

கதிர்வேலு மையமாக சிரித்து வைத்தான்.

அம்மா சொன்ன மாதிரி பேசாம டீச்சர் டிரெயினிங் முடிச்சு டீச்சர் ஆகி இருக்கலாம். எல்லா ஸ்கூலுலையும் கக்கூஸாச்சும் இருக்கும். என் பொண்ண விஜயசாந்தி ஐபிஎஸ் மாதிரி பெரிய போலீஸாக்கப் போறேன்னு கடங்கார அப்பன் உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னையும் கெடுத்துப் போட்டாரு.. ஆனது தான் ஆனேன்.. ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஆகி இருந்தாலாச்சும் கொஞ்சம் மூத்தரம் பெய்யவாச்சும் நேரம் இருந்திருக்கும்.. நம்ம யோக்கியதைக்கு போலீஸு வேலை தான் கெடச்சுது.. எல்லாம் என் கெரகம்.. மகேஸுக்கு ஆற்றாமையாக இருந்தது. இப்போதைக்கு வயிற்றின் அவஸ்த்தை கொஞ்சம் குறைந்தது போல இருந்தது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் அடிவயிற்றில் பிரளயம் வெடிக்கும் என்பதை நினைக்கும் போது அவளுக்கு பக் பக்கென்று இருந்தது.

ஜீப்பின் பானெட்டில் சாய்ந்தவாறு இன்ஸ்பெக்டர் வாக்கிடாக்கியை காதில் வைத்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். சற்று தாண்டி அந்த வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் முகப்பில் தண்ணீர் பீய்ச்சுவதற்கான பைப் பொருத்தப்பட்டிருந்தது. எப்படியும் ஒரு ஆயிரம் லிட்டர் தண்ணீர் இருக்கும். அதன் பின்னால் போலீஸார் வந்த நீல நிற வேன் நின்று கொண்டிருந்தது. அதுல ரெண்டு சீட்ட கழட்டி ரயில்ல இருக்கிற மாதிரி ஒரு கக்கூஸு வெச்சிருந்தா என்னவாம். நம்மள மாதிரி பொம்பள போலீஸுங்க ஆத்திர அவசரத்துக்கு யூஸ் பண்ண வசதியா இருக்கும்ல. என்னன்னமோ யோசிக்கிறாங்க. இத யோசிக்க மாட்டேங்குறாங்க. அதுக்குப் பின்னாடி போயி குத்த வைக்கலாமான்னு பாத்தா அதச் சுத்தி ஆம்பள போலீஸுங்க இருக்காங்க.. கருமம்டா.. என்றபடி பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது, பிலோமினா அக்கா பாக்கெட்டில் இருந்த கடலையை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு மென்றவாறு நின்று கொண்டிருந்தார். அவரது பாக்கெட்டில் எப்போதும் ஏதாவது ஒரு கடலை இருக்கும். பொட்டுக்கடலையோ.. நிலக்கடலையோ.. பட்டாணியோ. ஒருமுறை ஏன் என்று கேட்ட போது "மணிக்கணக்குல நின்னமேனிக்கே இருந்தா போர் அடிக்கும்ல.. அதுக்கு தான்" என்றார்.

அவர் எப்போதும் அப்படித்தான். எல்லாவற்றுக்கும் ஒரு காரணமும் ஒரு தீர்வும் வைத்திருப்பார். "ஏன்க்கா போலீஸா இருந்துட்டு பந்தோபஸ்த்துக்கு நின்னுட்டு இருக்கும்போது கடல தின்னுட்டு இருந்தா யாராச்சும் மதிப்பாங்களா" என்று கேட்டதற்கு, "நீ வேற வெறும் காக்கி சட்ட பேண்ட்ட கொடில மாட்டி இருந்தா கூட பாக்குற ரவுடி மனசுல ஒரு ஜெர்க் இருக்கும்டி.. பின்ன என்ன நம்மளப் பார்த்தா பயப்படுறாய்ங்க..”, என்று அசால்டாக சொல்வார்.

நேற்று அவரது தங்கை வந்திருப்பதாகவும், மகேஸுக்கு ஏதோ பரிசு வாங்கி வந்திருப்பதாகவும் சொன்னார். அவளது தங்கை சிங்கப்பூரில் பெரிய மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து வருகிறாள். "என்னக்கா பரிசு" என்ற போது "அதெலாம் சஸ்பென்ஸ்" என்றவாறு சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.

பிலோமினா அக்கா எல்லாவற்றிலும் வித்தியாசமாக யோசிப்பவள். ஒருமுறை மகேஸிடம் அவளது தங்கை வாங்கித் தந்ததாக டாம்பன்களைக் கொடுத்தார்.

"அக்கா இதெல்லாம் எப்பிடி யூஸ் பண்றதுன்னு கூட எனக்குத் தெரியாது " என்ற போது அதை எவ்வாறு உபயோகிப்பது என்று விளக்கிச் சொன்னார்.

"ஏய் யூஸ் பண்ணி பாரு புள்ள.. நல்லா இருக்கு.. பேட வெச்சுட்டு கறை ஆகுதா இல்லியான்னு திரும்பித் திரும்பி பாக்க வேண்டிதில்ல" என்றவளிடம்.. "போங்கக்கா.. உள்ள போயி அது உறுத்திட்டு இருக்கறது என்னமோ மாதிரி இருக்கு.. அதுவுமில்லாம கால அகட்டினா கீழ உளுந்துடுமோன்னு பயந்துட்டே இருக்கணும்.. எனக்கு பேடு தான் லாயக்கு", என்றவளைப் பார்த்து "நீயெல்லாம் எப்ப தான் மார்டனா யோசிக்கப் போறியோ போ..” என்றவாறு தலையில் செல்லமாகக் குட்டினாள்.

மேடை அருகே வைக்கப்பட்டிருந்த பெரிய ஸ்பீக்கரில் ஏதோ ஒரு பாட்டு அலறிக் கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து சூடாக ஒரு துளி கீழிறங்கியதை அவளால் உணர முடிந்தது. ரத்தமா சிறுநீரா என்று தான் தெரியவில்லை. பேடு வேறு கனக்கத் துவங்கி இருந்தது. லிட்டர் கணக்கில் தாக்குப் பிடிக்கும் என விளம்பரங்களில் சொல்வதை நினைக்கும் போது அவளுக்கு எரிச்சலாக வந்தது. அந்த கம்பெனி ஓனரின் தொடைக்கு நடுவே ஒரு மூணு லிட்டர் வெயிட்டை கட்டிக் கொண்டு நடக்கச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆடலாம் ஓடலாம் குதிக்கலாம்னு சிரிச்சமானிக்கு மூஞ்சிய வெச்சுட்டு சொல்ற மாடல்களைப் பார்க்கும் போது அவர்களின் கொமட்டில் குத்த வேண்டும் என்பது போல மகேஸுக்கு ஆத்திரம் வரும். அடி வயிற்றின் உள்ளே விண் விண் என்று வலிக்க, ஈர சொத சொதப்போடு குனியவும் முடியாமல், நிமிரவும் முடியாமல் மூன்று நாட்களில் படாத பாடு படும்போது சிரிக்கவா முடியும். இந்த விளம்பரக்காரனுகள..

"மகேஸு”.. பிலோமினா அக்கா தான் அழைத்தாள்.

"என்ன அக்கா.. இங்க வந்துட்ட.. இன்ஸு கத்தப் போறாரு.”.

"அந்த கடாயன் அந்தப் பக்கம் போயிட்டான். என்ன ஆச்சு உனக்கு? ஏன் முகமெல்லாம் வேர்த்துப் போயி கெடக்கு.”

"அக்கா.. யூரின் அர்ஜெண்ட்கா.. காலைல வெச்ச பேடு.. நச நசன்னு இருக்கு.. மாத்தணும்.. ஒரு மறப்பு கூட இல்ல.. எரிச்சலா இருக்கு.”.

"அடி லூஸு இதானா?.. கொஞ்சம் பொறு இருட்டீரும்.. அப்படியே அந்த பிளக்ஸ் போர்டுக்குப் பின்னாடி போயி மாத்திட்டு வந்துரு..”

"வெளயாடாதக்கா.. இத்தன ஆம்பளைங்க வந்துட்டும், போயிட்டும் இருக்கும்போது எப்பிடி பேண்ட்ட கழட்டி குத்த வெச்சு உட்காருவேன்..”

"இரு வர்றேன்.." என்றவாறு வேனுக்குள் சென்றவள் சற்று நேரத்தில் திரும்ப வந்து ஒரு பொட்டணத்தைக் கையில் திணித்தாள்.

"என்னக்கா இது?”

"ஹ்ம்ம்ம்... அந்த பிளக்ஸ் போர்டுக்கு பின்னாடி போயி பிரிச்சுப் பாரு தெரியும்.. லூஸுப்புள்ள".. என்றவாறு தலையில் கொட்டி விட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு கடலையை எடுத்து வாய்க்குள் போட்டவாறு அவரது இடத்துக்குச் சென்றாள் பிலோமினா அக்கா. மகேஸ் அதை அப்படியே பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டாள்.

மகேஸு கையிலிருந்த வாட்சைப் பார்த்தாள். 6.45 ஆகி இருந்தது. வானம் கருக்கத் துவங்கி இருந்தது. எதிரில் இருந்தவர்கள் மச மசவெனத் தெரிந்தார்கள். மீட்டிங் நடக்கும் இடத்தைச் சுற்றி ஒளி வெள்ளமாக இருந்தது. ஒவ்வொரு பிளக்ஸ் போர்டுக்கும் ஒரு டியூப் லைட் வைத்திருந்தாலும் அவை இன்னும் எரியத் துவங்கி இருக்கவில்லை. பின்னால் திரும்பி பொட்டல் காட்டைப் பார்த்தாள். இருட்டு கட்டி இருந்தது. தாக சாந்தியை முடித்துக் கொண்டு பெரும்பாலான கொள்கை வீரர்கள் தங்களது தலைவனின் உரை வீச்சைக் கேட்க ஆயத்தமாக மேடை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். இது தான் சமயமென்று மகேஸுக்குத் தோன்றியது.

"அண்ணே இப்ப வந்துடறேன். இன்ஸு கேட்டா சமாளிச்சுக்குங்க" என்று கதிர்வேலுவிடம் சொன்னவள் நேராக வேனுக்குள் சென்றாள். தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்தவள் அதிலிருந்த ஒரு பேடை உருவி இன்னொரு பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, தான் நின்று கொண்டிருந்த அந்த பிளக்ஸ் போர்டை நோக்கிச் சொன்றாள். இன்னும் அதனுடன் இருந்த டியூப் லைட் எரியவில்லை. பிளக்ஸ் போர்டுக்கு கீழே அரை அடி கேப் இருந்தது. அதன் வழியாக போர்டுக்குப் பின்னால் இருப்பதைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு யாரும் கூர்ந்து பார்க்க வாய்ப்பில்லை.

பேண்டைக் கழற்றி உட்காரும்போது யாரேனும் பார்த்து விட்டால்???? ஆனாலும் மகேஸுக்கு வேறு வழி தெரியவில்லை. அடி வயிற்றிலிருந்து கீழிறங்கும் துளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தாள். கதிர்வேலுவும் சுப்பிரமணியும் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள். பிளக்ஸ் போர்டுக்குப் பின்புறம் இப்போது முழுமையாக இருட்டி விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் லைட் போட்டு விடுவார்கள். பிலோமினா அக்காவைப் பார்த்தாள். அவர் இடது கண்ணை சிமிட்டி வலது கை பெருவிரலை உயர்த்திக் காட்ட, மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு சர சரவென பிளக்ஸ் போர்டுக்குப் பின்னால் சென்றாள்.

பெல்ட்டைக் கழட்டி பேண்ட் ஜிப்பை அவிழ்த்தவளுக்கு பிலோமினா அக்கா சொன்னது நினைவுக்கு வர, பேண்ட் பாக்கெட்டிலிருந்து அந்த பரிசுப் பொட்டலத்தை எடுத்து சரசரவெனப் பிரித்தாள். சின்ன வயதில் தண்ணீர் குடிக்க பயன்படுத்திய மூக்குச் சொம்பைப் போல பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருந்தது அது. இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்தபோது மண்டைக்குள் மின்னல் வெட்டியது. பெண்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் உபகரணம். மகேஸுக்கு மலுக்கென்று உள்ளே ஏதோ உடைந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. அணிந்திருந்த பேடை உருவி கையோடு கொண்டு சென்றிருந்த பேப்பரில் சுற்றி தூர எரிந்தவளுக்கு அந்த உபகரணத்தை எப்படி அணிவது என்று இணையத்தில் பார்த்தது நினைவுக்கு வர, சட்டென உடலில் பொருத்திக் கொன்டாள்.

அடக்கி இருந்த சிறுநீர் பிளக்ஸ் போர்டில் தெறித்தது. அப்போது அந்த இடத்தைக் கடந்த காரின் வெளிச்சத்தில் மகேஸ் இருந்த பிளக்ஸ் போர்டை கூர்ந்து பார்த்த பிலோமினாவுக்கு ஏதோ ஒரு ஆண் சிறுநீர் கழிப்பதைப் போல நிழலாகத் தெரிய குபீரென்று சிரிப்பு பொங்கியது. ஆற அமற வேலையை முடித்த மகேஸ் கையிலிருந்த மினரல் வாட்டரால் அதைக் கழுவி பாக்கெட்டில் திணித்துக் கொண்டாள். இன்னொரு பாக்கெட்டில் இருந்த பேடை உருவி, அதை நின்றவாறே பொருத்திக் கொண்டு பேண்ட்டைப் போட்டு பெல்ட்டினால் இறுக்கிக் கொண்டாள். கைகளில் மிச்சமிருந்த தண்ணீரை கொட்டி சுத்தப்படுத்திக் கொண்டாள்.

வெளியே வந்தவள் நேராக பிலோமினாவிடம் சென்று அவளைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். "நன்றிக்கா" என்றவளை பிலோமினா செல்லமாக தலையில் குட்டினாள்.

"போயி நில்லு கடாயன் வர்றான்" என்று பிலோமினா சொல்லவும் மகேஸ் தன்னுடைய இடத்தில் வந்து நின்றாள். மகேஸுக்கு வயிறு லேசாகி முகத்தில் சிரிப்பு கொப்பளித்தது. மூச்சை பலமாக இழுத்து வயிற்றை உள்பக்கமாக இழுத்தாள். வலி வெகுவாக மட்டுப் பட்டிருந்தது. சாலையில் அரவம் கேட்க தலையை உயர்த்திப் பார்த்தாள். தலைவரின் கார் வந்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் ஜீப்பில் வந்த ஒரு அடிப்பொடி கையில் வைத்திருந்த மைக்கில் "கறைபடியாத எங்கள் தலைவர் வந்து கொண்டிருக்கிறார்", என கத்திக் கொண்டுவர திடீரென்று டியூப் லைட்டுகள் எரியத் துவங்கின.

மகேஸ் சற்றே திரும்பிப் பார்க்க அவள் ஒதுங்கின பிளக்ஸ் போர்டில் இருந்த தலைவரின் முகத்தில் சற்றே மஞ்சள் நிற கறை படிந்திருக்க, அதிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. மகேஸுக்கு கொல்லென்று சிரிப்பு வந்தது. சத்தமாக சிரித்துக் கொண்டே பிலோமினா அக்காவைப் பார்க்க, அவரும் கடலை நிரம்பிய வாயுடன் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

- காலச்சித்தன்

Pin It