மழைக்காலம் முடிந்து ஒடைகளில் நீரோட்டம் குறைந்திருந்தது. அதற்கப்புறம்தான் 100 நாள் வேலைக்கு அழைத்தார்கள். அதற்குள் நாகம்மா படாதபாடு பட்டுவிட்டாள். தோட்ட வேலைக்குச் சென்றால் அறுபது ரூபாய் கிடைக்கும். ஆனால், வேலை கிடைக்குமா என்பதுதான் தெரியாது. வேலை கிடைத்துவிட்டால், எப்போது கூலி கிடைக்கும் என்று தெரியாது.

முருகேஸ்வரி அக்காதான் ஊரில் மேஸ்திரி மாதிரி. அவரிடம் சொல்லி வைத்திருந்தாள்.

இதற்காகவே ஒரு நாள் மாலை சென்று அக்காவைப் பார்த்து, ‘ஒனக்கு தெரியாதது இல்லக்கா.. அந்த மனுசனக் கட்டிகிட்டு நாய் படாத பாடு படறேன்.. ரெண்டு சின்னஞ்சிறுசுங்க.. ரேஷன் அரிசியும் தீந்துபோச்சி.. வெல அரிசிக்குக் கையில காசில்ல.. என்னிக்குன்னாலும், என்ன வேலன்னாலும் என்னக் கூப்பிடுக்கா’, என்று சொல்லிவைத்துவிட்டு வந்திருந்தாள்.

ஒரு கிலோ அரிசி இப்போதெல்லாம் இருபத்தைந்து ரூபாயுக்குக் குறைந்து கிடைப்பதில்லை. அதுகூட கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பாலீஷ் செய்ததுதான். ஆனால் கிடைக்க வேண்டுமே.

அவள் குடும்பத்திற்கு மாசத்திற்கு 45 கிலோ அரிசி வேண்டும். ரேஷன் கடையில் 20 கிலோ போடுவான்.. நாடார் கடைக்கு எடுத்துக்கொண்டு போய் எடைபோட்டுப் பார்க்கும்போது பதினெட்டு கிலோ இருந்தால் பெரிய விஷயம். அதிலும், எப்போ கடை திறப்பான் என்று காத்திருப்பதிலேயே இரண்டு நாள் கூலி போய்விடும்.

நூறு நாள் வேலை ஆரம்பித்த பின்னர்தான் அவள் பிரச்சனை கொஞ்சம் தீர்ந்தது. வாரம் எப்படியும் 400 ரூபாய் சம்பாதித்துவிடுவாள். அதை வைத்து சமாளித்தாள். தோட்ட வேலைக்குச் செல்லும்போது வாரம் 300 ரூபாய் கிடைப்பதே பெரும்பாடு.. அதிலும் வேலை கிடைத்தால்தான்.. கிடைக்கவில்லையென்றால், சுருண்டு கிடக்கும் பிள்ளைகளைப் பார்த்தபடி படுத்திருக்கும் இவள் கண்களில் எப்படி தூக்கம் வரும்?

அன்று சம்பள நாள். சம்பளத்தை எண்ணிப்பார்த்தாள். 370 ரூபாய்தான் இருந்தது. யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று சம்பளத்தைக் குறைத்துவிட்டார்களாம். ஒருத்தி மாத்தி ஒருத்தியென்று அந்தப் பணியாளரைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டார்கள். சண்டை போட்டதுதான் மிச்சம்.

சம்பளம் கொடுத்த பின்னரும் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாதாம். யாரோ ஒரு ஆபீசர் வருகிறார் என்று எல்லாரையும் உட்கார வைத்துவிட்டார்கள்.

நாகம்மா அந்த நேரத்தில் ஒரு தலைச்சுமை விறகு வெட்டி கட்டிவைத்துவிட்டாள். ஆட்டுக்குட்டிக்கு கொலையும் வெட்டி வைத்துவிட்டாள்.

ஆபீசர் வந்து ஏதேதோ சொன்னார். வேலையைக் கடுமையாகச் செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். சொன்ன அளவுக்கு வெட்ட வேண்டுமாம். இல்லையென்றால் இந்தக் கூலியும் கிடைக்காதாம்..

மஞ்சனத்தியும் கருவையும் படர்ந்த செம்பார் பூமியைக் கடப்பாறையால் குத்திக்குத்தி அனைவரின் கைகளும் புண்ணாகிக் கிடந்தன. ஆனால், அளவு வரவில்லையாம். இந்த வாரமும் சம்பளம் குறையுமாம்.. ‘சரி கொறஞ்சா என்னா.. வேலை கெடைக்குதுல்ல’, என்று நாகம்மா தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

’போகலாம்’, என்று சொன்னபோது முதலில் புறப்பட்டது நாகம்மாதான்.

வீட்டில் குண்டுமணி அரிசியில்லை. ‘வெல அரிசி’ வாங்கவேண்டும். கடன் 200 கட்ட வேண்டும்.. விறகு தலையில் இருந்தாலும் பற்ற வைக்க மண்ணெண்ணெய் வேண்டும். இவள் போனபோது இந்த மாதம் ரேஷன் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். வாங்க வேண்டிய எல்லாவற்றையும் வாங்கி முடித்தால் என்ன மிஞ்சும் என்று கணக்குப்போட்டாள்.. பயமாக இருந்ததது. கேதம் ஆன கூட சம்பூரணம் குழுவிற்குப் பணம் கட்டியே ஆக வேண்டும்.. என்ன செய்யலாம்?

அப்போதுதான் சட்டக்கூலி என்று ஏதோ கட்சிக்காரர்கள் பேசியது நினைவுக்கு வந்தது. கட்சிக்காரர்கள் என்பது கம்யூனிஸ்ட்டு கட்சிக்காரர்கள். மற்ற கட்சியெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல்தான் ஊருக்கு வரும்..

நூறு நாள் வேலையில் நூற்றியிருபது ரூபாய் கிட்ட தர வேண்டுமாம். ஒரு வேளை அப்படி போட்டிருந்தால் இவள் கையில் காசு கொஞ்சம் மிச்சமிருந்திருக்கும் என்று தோன்றியது.

கம்யூனிஸ்ட்டு கட்சிக்காரர்கள் எப்பப்பாத்தாலும் போராட்டத்திற்குக் கூப்பிடுவார்கள். ‘போகலாம்தான். அன்னைய கூலிய யாரு தருவா?’ என்று முனகிக்கொண்டாள்…

இவள் எட்டு வரை படித்தவள். கணக்கில் புலி.. ஆனால், இங்கிலீஸ் வராது. கிளாசுக்கு இங்கிலீஸ் வாத்தியாரும் வரமாட்டார்.. இவளுக்குக் கணக்கு வாத்தியார் ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால், 9 போவதற்கு முன்பாக அந்தக் கிராதகனைக் கட்டிக்கொள்ளும்படி ஆனது. அன்று ஆரம்பித்த பிரச்சனைதான் இன்றுவரை ஒடிக்கொண்டிருக்கிறது.

அவன் இவளைவிட பத்து வயது மூத்தவன். அருகாமை நகருக்குச் சென்று மூட்டை தூக்குபவன். உடம்பு கட்டு மஸ்தாக இருக்கும். அருகில் நெருங்கும்போது பீடி நெடியும் சாராய வாடையும் இவளை விலகச்சொல்லும். முதலில் அவளுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. இரண்டு பிள்ளைகள் ஆனபின்பு அவனை நெருங்கவிடாமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். அவன் குடியை அதிகப்படுத்தினான். அடியை அதிகப்படுத்தினான்.

அவன் வரும்போது கொழம்பும் வெஞ்சனமும் இருக்க வேண்டும். சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவி விட்டு சாய்ந்துவிடுவான். சாய்ந்துவிட்டால் தூக்கம்தான்.

அதற்காகவே நிறைய சோறுபோட்டு நல்ல குழம்பு வெஞ்சனம் வைத்திருப்பாள். குறையாகிப் போனால் அவனுக்குத் தூக்கம் வராது. இவளுக்குத் தூங்க முடியாது.. தாங்கவும் முடியாது. தாங்க முடியாது என்றால் அடி விழும்.. அடியைத் தாங்கித் தாங்கியே இவள் உடம்பும் கூட மரத்துப்போயிருந்தது.

உடம்பு மரத்துப்போயிருப்பது பெரிசில்லை. மனதும் மரத்துப்போயிருந்தது. தோட்டத்திலேயோ, ஓடையிலேயோ அரும்பாடுபட்டு வேர்த்து விறுவிறுத்து கூலியுடன் வீட்டுக்கு வந்து தண்ணியெடுத்து, கடைக்குப் போய் வந்து, குழம்பு கூட்டி, சோற்றை வடித்து முடித்துவிட்டு சாயும்போது.. சாய்வதற்கு ஒரு மார்பு வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். நோகும் கைவிரல்களை நொடித்துவிட ஒரு கரம் வேண்டும் என்று ஏங்கியிருக்கிறாள். மார்கழிக் குளிரில் கந்தலுக்குள் முடங்கிக்கொள்ளும்போது வெம்மை தரும் துணைவேண்டும் என்று உருகியிருக்கிறாள்..

இவையெல்லாம் என்றும் கிடைத்ததில்லை. உழைத்துக்கெட்ட உடம்பு, தானே வலித்து உறங்கிப்போகும்... மனது மட்டும் கனவுலகில் விழித்தெழும்… அப்புறம் மனதும் மரத்துப்போனது.. கனவுகளும் இறந்துபோயின.

போகும் வழியில் ஓடையில் கட்டிவைத்திருந்த ஆட்டை அவிழ்த்துக்கொண்டாள். அந்த ஆடுதான் சித்திரையில் கை கொடுக்கும் என்பது அவள் கணக்கு. பெரியவள் பன்னிரெண்டு போகிறாள். யூனிபாம், புத்தகம் வாங்க பணம் வேண்டும். சின்னவன் பத்து வந்துவிடுவான். அடுத்த வருடம் பிரச்சனை கூடிவிடும். நூறு நாள் வேலையில் மிச்சம் பிடித்து எப்படியும் இன்னொரு குட்டி வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தாள்.

நாகம்மா குட்டியை அவிழ்த்துக்கொண்டு வருவதற்குள் பாதி சனங்கள் முன்னே போய்க்கொண்டிருந்தார்கள். அனைவரும் ஓட்டமும் நடையுமாய் போய்க்கொண்டிருந்தார்கள். கம்மாய் கரையைக் கடந்துவிட்டிருந்தார்கள். அப்போதுதான் கரையின் ஏறும் அந்த சைக்கிளை அவள் பார்த்தான். அவன்தான்.. அந்தக் கிராதகன்தான்.

சம்பள நாள் தெரிந்துதான் வந்திருக்கிறான் என்று பட்டது. மாலை மங்கிக்கொண்டிருந்தது. இன்று வேலை கிடைக்கவில்லையோ.. டாஸ்மாக் செலவுக்கு வந்துவிட்டானோ?

இவள் சட்டென கரையைவிட்டு விலகி கருவைக் காட்டுப் பாதைக்குள் நுழைந்தாள். தலைச்சுமை கருவை முள்ளில் இழுபட்டது. ஆட்டுக்குட்டி புதுப் பாதையால் மிரண்டு பின்னுக்கு இழுத்தது. எப்படி காட்டுப்பாதையில் போக முடியும்?

முடியும்.. முடியனும்…

இருக்கும் சம்பளத்தை அவன் அடித்துக்கொண்டு போய்விட்டால், அரிசிக்கு, மண்ணெண்ணெய்க்கு என்ன செய்வது? அவள் வைராக்கியமாக கருவையோடும் விறகோடும் ஆட்டுக்குட்டியோடும் போராடி வீட்டுக்குப் போய் சேர்ந்தாள்..

வீட்டு வாசலில் விறகைப் போட்விட்டு, ஆட்டுக்குட்டியைக் கட்டினாள். கொண்டுவந்த குலையை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுத் திரும்பினாள்..

கதவு திறந்திருந்தது.. ‘பிள்ளைங்க வந்திருக்க மாட்டார்களே.. ரெண்டும் மினி பஸ் பிடித்து வர நேரமாகுமே..’, என்று யோசித்தாள்.

வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் பீடியைப் பிடித்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்தான். ‘கருவக் காட்டுக்குள்ள எறங்கிட்டா.. நாங்க உட்டுருவமா?’

இவளுக்குத் திக்கென்றிருந்தது. வந்துவிட்டது கூலிக்கான ஆபத்து என்று தெரிந்தது.

முந்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவளாக, ‘இன்னிக்கு எவ்வளவு சம்பாதிச்ச?’ என்று கோபப்படுவதுபோலக் கேட்டாள்.

’சம்பாத்தியமா? குடிச்ச பீடிக்குக் கூட வேல வல்ல. இன்னிக்கு என்ன சந்தையா… வேல வர்றதுக்கு..?’

நாகம்மாவுக்குப் புரிந்துவிட்டது. மடியில் இருக்கும் கூலிக்கு ஆபத்து வந்துவிட்டது.. இவள் போட்ட கணக்கு ஒத்து வராது.

அவன் எழுந்து வந்தான்.. ‘இதுக்கு மேல என்ன லாரி வரும்? அதாம்புள்ள வந்துட்டன்’ என்று நெருங்கி வந்தான். இவள் வெளியே ஓடினாள்..

‘முத்தம்மாக்கா’ என்று அழைத்தபடி ஓடினாள். அவள் சொல்லுக்குத்ததான் இவன் கொஞ்சம் அடங்குவான்.

முத்தம்மாள் வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது.

அவன் நெருங்கி வந்தான்.. இவள் மடியில் கட்டியிருந்த பணத்தை கைகளால் மறைத்துக்கொண்டாள்.. சட்டென்று இறங்கியது அவன் கை.. நாகம்மாவின் தலைக்குள் நட்சத்திரங்கள் பறந்தன.. அப்படியே உட்கார்ந்துவிட்டாள். மூட்டைத் தூக்கி இறுகிய அவன் கைகள் அடுத்து அவள் முதுகில் இறங்கின.. அப்புறம் அவளுக்கு நினைவு தவறியது.. புடவை முந்தியை உருவியெடுத்தது தெரிந்தது.. அப்புறம் தலையில் எட்டி உதைத்தது தெரிந்தது..

நினைவு வந்தபோது முத்தம்மா இவளை எழுப்பிக்கொண்டிருந்தாள். அவசரமாக முந்தியை எடுத்துப் பார்த்தாள். பணம் இல்லை.. ‘என்னடி பணத்தைப் போட்டுட்டு தூங்கற- இன்னிக்கு நெறய கூலியோ’ என்றாள் முத்தம்மா.

அப்போதுதான் அவள் பார்த்தாள்.. அவள் கிடந்த இடத்தில் 100 ரூபாய் நோட்டு மட்டும் கிடந்தது. ‘நாயி.. நாயி.. நாயிக்குப் பொறந்த நாயி’ என்று அவள் மனம் புலம்பியது. ‘கடக்காரனுக்கு வாய்தாவா சொல்ல முடியும்…’ நாகம்மாவின் தலை விண்விண் என்று வலித்தது.

முத்தம்மாவுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது.. ‘இன்னிக்குக் கௌக்கூட்டம்.. வாரியா? இப்பத்தான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வாரேன்’’ என்றாள்.

‘இல்லக்கா’ என்றாள் நாகம்மா.

’ஆனா, 100 நாள் வேலையில கூலி கட்டலன்னு அப்புறம் பொலம்பு.. ரேஷன் கடையல எட கொறயுதுன்னு சொல்லு… அப்ப வச்சிக்கிறன்’, என்று முத்தம்மாக்கா விலகி நடந்தாள்.

‘புள்ளைங்க வரும்போது சோறு போடறதா, கடக்காரனுக்குப் பதில் சொல்றதா, பத்து மணிக்கு அவன் வெறியோடு வரும்போது வெஞ்சனத்தோடு சோறு போடறது எப்புடி?’ இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நாகம்மாவுக்கு தெம்பில்லை. மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.

இவளுக்கும் தெரியும். கட்சிக் கிளைக் கூட்டத்துக்குப் போக வேண்டும்தான், ‘ஆனா போனா அடிய வாங்கிறது யாரு? புள்ளைங்க மதியம் சாப்பிட்டிருக்காது.. சோறு இல்லன்னாலும் கஞ்சி இருக்கனும்ல..?’

ஆனால், இவளுக்கு அவரைப் பிடிக்கும்…. கிளைக் கூட்டத்திற்குத் தோழர் வருவார். அன்றைய கிராம நிலைமை முதல் டெல்லி வரைக்கும் பேசுவார். அவர் பேசுவது இவளின் கணக்கு வாத்தியார் பேசுவது போல இருக்கும்… ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து இரகசியத்தைப் புரிய வைக்கும் சுவாரசியம் இருக்கும்.

இவள் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியவள் வந்து சேர்ந்தாள். தம்பி அடுத்த பஸ்சில் வருவான் என்று தகவல் சொன்னாள்.

‘அம்மா பசிக்குது’ என்றாள் அவள். அவளுக்கும் நாகம்மா என்றுதான் பெயர்.. அவர்கள் வழக்கப்படி எல்லா பெண் குழந்தைகளும் நாகம்மாதான். நாகம்மா என்பது அவர்களின் தெய்வம்.

வசதிக்காக பெரிய நாகம்மா, சின்ன நாகம்மா, கருப்பு நாகம்மா என்றெல்லாம் அழைத்துக்கொள்வார்கள்.

தலையின் வேதனையை ஒதுக்கிவிட்டு நாகம்மா எழுந்தாள். கடைக்காரனுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தாள். நாடார் ஒப்புக்கொள்வதாய் இல்லை. ‘200 ரூபா பாக்கிய குடு’, என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

‘சம்பளம் போட்டாச்சில்ல.. அப்புறமும் பாக்கின்னா என்னக்கி கொடுப்ப?’, என்றார்.

அவரிடம் ஓரியாடி, ஒரு கிலோ அரிசியும், காய்ந்துபோன காயும் வாங்கிவந்தாள். சமைத்து பிள்ளைகளுக்கு போட்ட பின்னர்தான் சுவற்றில் சாய்ந்தாள். பிள்ளைகள் தட்டைக் கழுவி வைத்துவிட்டு படுக்கப்போனது அவளுக்கும் தெரியும். அப்புறம், சுருண்டு கிடந்த அவள் அடிவயிற்றில் வலி தீப்போல பிடித்தபோதுதான் எழுந்தாள்..

நிமர்ந்து பார்த்த அவன் மூஞ்சிக்கு எதிரே அவள் கால் இருந்தது..

’சோத்தைப் போடுறியா.. இன்னும் ரெண்டு எத்தவா..? பொட்டச்சிக்கு என்னடி தூக்கம்.. ஒம்பது மணிக்கு..?’

அவளுக்குப் புரிந்துவிட்டது. அந்த மிருகத்தைத் தூங்க வைக்க வேண்டும். அது தூங்காவிட்டால் இவள் தூங்க முடியாது..

பானையை வழித்து சோற்றைத் தட்டில் கொட்டினாள்.. இருந்த குழம்பையெல்லாம் அதில் ஊற்றினாள்.. வெஞ்சனம்..? அதுக்கு ஏது பணம்..

தட்டை அவனை நோக்கித் தள்ளிவிட்டு அமர்ந்தாள். எறிந்த கல் போல தட்டு அவனிடம் போய் நின்றது.

சுவற்றில் சாய்ந்தாள். வயிறு எரிந்தது. ஆனால் அவளுக்குத் தெரியும் பானையில் சோறில்லை… அதனால் என்ன? அவன் தூங்க வேண்டும் இல்லையென்றால், இவளுக்குத் தூக்கம் இல்லை…

அவன் ’எங்கடி வெஞ்சனம்?’ என்று உறுமினான்.

‘அதாம் பணத்தைப் புடிங்கிட்டிய.. எவங்கிட்ட படுத்து வெஞ்சனம் வைக்கிறது?’

‘ஆங்.. எங்கிட்டதா படுக்கமாட்ட .. நாடாருகிட்ட படுக்கிறது.. வெஞ்சனம் வருமுல்ல‘

இவள் காதைப் பொத்திக்கொண்டு வெளியே நடந்தாள். வானத்தில் பௌர்ணமி நிலவிருந்தது. தெருவே தூங்கிப் போயிருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் யாரும் இல்லை. தெருவோரத்து மொட்டைக்கிணற்றின் அருகே அமர்ந்து கொண்டாள். ஊர் குப்பையெல்லாம் அந்தக் கிணற்றில்தான். கிணற்று கருப்பு நீரில் நிலவொளி தழுவிய இவள் உருவம் தெரிந்தது. வயதாகிப் போய்விட்டது என்று உணர்ந்தாள்.

கிணறு நாற்றம் அடித்தது. அவள் கணவனின் வாய் போல.. ’இருக்கட்டும்… அந்த நாயி தூங்கட்டும்’ என்று அமர்ந்துகொண்டாள்.

‘என்னடி தூக்கமா?’ என்றபடி முத்தம்மா அக்கா வந்தாள். கிளைக் கூட்டம் அப்போதுதான் முடிந்தது போல..

‘தோழர் கேட்டாரு.. நாகம்மா ஏன் வரலன்னு’ என்றாள் முத்தம்மாக்கா.

இவள் ஒன்றும் சொல்லவில்லை. என்னத்தைச் சொல்ல.. பேசுவதற்குக் கூட தெம்பில்லை.

‘சரிடி வூட்டுக்குள்ள போயி தூங்கு.. பனியில ஒக்காந்து அப்புறம் படுத்துக்காத’ என்றபடி முத்தம்மாக்கா கடந்து சென்றாள்.

இவள் எழுந்து வீட்டுக்கு நடந்தாள். கால் பின்னியது.. கெண்டைச் சதைகள் வலித்தன. வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

உள்ளே போனபோது அது உட்கார்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தது. இரண்டு பிள்ளைகளும் இவள் சேலையைப் போர்த்தியபடி சுருண்டிருந்தன.

இவள் விளக்கை அணைத்தாள்.. ‘ந்தா.. தூங்கலியா?’ என்றபடி சுவற்றோரம் சரிந்து கண்ணை மூடினாள்.

கொஞ்ச நேரம் கழித்து அவன் கைகளை உணர்ந்தாள். அவை இவளைப் புரட்டின. திரும்பி கூரையைப் பார்த்து படுத்தாள். அவன் மேலே படர்வது தெரிந்தது..

‘ந்தா.. ஓம் பொண்ணு உட்கார்ந்துடிச்சி. அறிவு வேணாம்..?’, என்று விலகினாள்.

அவன் கைகள் இரும்பு போல அவள் கால்களைப் பிடித்து விலக்கின.

’ஆமாண்டி.. ஒம் பொண்ணு ஒன்ன விட நல்ல வளர்றா’

’என்னது?

‘அடுத்த வருஷம் ஒன்ன தொணத்த மாட்டன்’, என்றபடி அவன் மும்முரமானான்

இவள் மீண்டும் ‘என்ன அறிவில்ல ஒனக்கு.. அவ ஒம்பொண்ணு.’ என்று கத்தினாள்.

‘ அதுக்கென்னடி.. நெசமாவே ஒன்னங்காட்டிலும் ஒம் பொண்ணு.. அழகாயிட்டு வர்ரா..’

‘வாய மூடுடா நாயி’, என்று நாகம்மா சீற, அவன் கை இவள் முகத்தில் இறங்கியது. தலை சுற்றிக்கொண்டு வந்தது.. வெறிகொண்டவளானாள்..

‘ஹோ..’ வென்று கத்தினாள். பின்னால் சென்ற கைகளில் அம்மி தட்டுப்பட்டது. துழாவி குழவியை எடுத்து அவன் தலையில் இறக்கினாள். சொத்தென்ற சப்தம் கேட்டது. அவன் சரிந்து விழுந்தான்.

இவள் கால்களை இழுத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.. எழுந்தாள்.. கையில் குழவியுடன் எழுந்தாள்.

கீழே கிடந்த அவன், தலையில் இருந்து இரத்தம் வழிய மூச்சு வாங்கிக் கொண்டு அசையாது கிடந்தான்.

‘மூச்சு வருதோ.. பச்சப்புள்ளன்னு தெரியாத நாய்க்கு, மூச்சு வருதோ’ என்று முனகியபடி கையில் இருந்த குழவியை மீண்டும் அவன் தலையில் இறக்கினாள்.

அப்புறமும் அவளுக்கு விடக்கூடாது என்று தோன்றியது- புடவையொன்றை எடுத்து அவன் கால்களைக் கட்டினாள்.. மற்றொரு முனையைச் சுருட்டி அவள் தலையைச் சுற்றி கட்டினாள்.. அவன் கால்களைப் பிடித்து செத்துப்போன நாயை கட்டியிழுப்பதுபோல இழுத்துச் சென்று மொட்டைக் கிணற்றுக்குள் தள்ளினாள். சரிந்து தரையில் விழுந்தாள்.. இவள் மேல் கிணற்று நீர் சிதறியது.

சரிந்து கிடந்தவள் மனதில் ஆங்காரம் ஆயிரம் கைகொண்ட நாகம்மாபோல எழுந்தது… வெறி கொண்டவளாக மொட்டைக் கிணற்றின் கல் ஒன்றை உள்ளே தள்ளினாள்.. துவண்டு விழுந்து வானத்தை நோக்கி கையை உயர்த்தி ‘நாகம்மா எம்புள்ளைகளைப் பார்த்துக்க..’, என்று அரற்றினாள்..

எத்தனை நேரம் போனது என்று தெரியவில்லை. தலையை யாரோ பிடித்தாட்டுவது உணர்ந்து விழித்த அவள் கண் முன் தோழரின் நீல நிற பேண்ட் தெரிந்தது.. நிமிர்ந்தாள்.

தோழரின் முகம் தெரிந்தது. இன்னும் இருட்டாக இருந்தது.. ஊர் ஜனம் கூடியிருந்தது…

‘நாகம்மா…என்ன ஆச்சி’

‘கொன்னுட்டேந் தோழரே நாயை அடிச்சே கொன்னேன்’ என்று அவர் கால்களைக் கட்டிக்கொண்டாள். அவர் சட்டென்று பின்வாங்கினார்.

‘காலெல்லாம் பிடிக்காதம்மா’ என்றபடி அவள் தலையைப் பிடித்து நிமிர்த்தினார், ‘என்ன தாயி.. கடிஞ்சு பேசாத நீயா.. நீயா.. கொன்ன?’

‘ஆமாய்யா நாந்தேன் கொன்னே.. தலையில கல்லால அடிச்சி கெணத்துல தள்ளிக் கொன்னே..’, என்று மறுபடியும் அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

ஊர் கூடியிருந்தது. முத்தம்மாக்கா அதிர்ந்துபோய் நின்றிருந்தாள். பிள்ளைகள் இரண்டும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தன.

‘எழுந்திரு நாகம்மா‘ என்றார் தோழர்.

‘சாமீ.. அந்த நாயைக் கொன்னுட்ட சாமி.. எம்புள்ளைங்கள நாகம்மாகிட்ட விட்டுட்டஞ் சாமி..’ என்று மீண்டும் அரற்றியபடி தோழரின் கால்களைக் கட்டிக்கொண்டாள்..

‘நாகம்மாங்கிறது சாமி.. அது இல்ல.. ம்.. அது வராது.. ஆனா, நாங்க இருக்கோம். கட்சியிருக்குது.. ஒம் புள்ளைங்க அனாதியில்ல’ என்ற தோழரின் குரல் கேட்டது.

அதுபோதும்.. அது போதும் என்று அவள் மனது சொல்ல எழுந்து வெறி கொண்டவளாக ஓடினாள்.. ஊரின் பஸ் நிறுத்தம் நோக்கி..,.

‘என்ன செயில்ல போடுங்க.. போடுங்கையா செயில்ல’ என்று அவள் அலறியதில் ஊர் ஜனம் அதிர்ந்தது. பின்னர், மனமெல்லாம் ஒன்று போலத் துடிக்க அவள் பின்னுக்கு ஒடியது.

Pin It