எனது அறை கலவரபூமியாய் காட்சியளித்தது. ஒரு டைரியை அறை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறேன். பொங்கலுக்காக ஒரு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஆனால் விடுமுறையையும் ஊருக்கு வந்ததையும் கொண்டாட முடியாதவனாய் டைரியைத் தேடுகிறேன். தேடுகிறேன். காலையிலிருந்து, இன்னமும் அகப்பட்ட கதையாயில்லை.

அது ஒரு பச்சை நிற டைரி. மெத் மெத்தென்று இருக்கும். என்னுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்த செல்வம் பயல் எனக்கு பரிசளித்தான். இந்த வருடமில்லை. மூணு அல்லது நாலு வருடமிருக்கலாம். இப்போது அந்த டைரியின் வயது முக்கியமே இல்லை. என் லைசென்ஸ் ஒரிஜினல் காப்பி அதனுள் வைத்திருந்தேன். டூப்ளிகேட் சென்ற வாரம் தொலைந்துவிட்டது. சரி ஒரிஜினல் பத்திரமாய்த் தான் இருக்கே... நாமும் ஊருக்குத் தானே போகிறோம் போனதும் எடுத்துவிடலாம் என்று பதறாமல் இருந்தேன். இங்கே வந்தால் டைரியையே காணோம்.

அந்த டைரியை செல்வம் எனக்கு கொடுத்த அன்று என் பெயரையே கலர்கலர் ஸ்கெட்ச்சு பேனாக்கள் கொண்டு ஒரு ஓவியமாய்த் தீட்டியதும், அதற்கு சொஸ்தமாய் மூணு மணிநேரம் ஆனதும் இப்போது என் எரிச்சலை அதிகப்படுத்தின. அப்படி ஒன்றும் என் கையெழுத்து நன்றாக இருக்காது என்பதும், எனக்கு ஓவியம் வரையத் தெரியாது என்பதுவும் கூட உபரித்தகவல்கள்.

பொதுவாய் நான் டைரியில் எழுதவேண்டியவற்றை வெள்ளைத் தாட்களில் தான் எழுதுவது வழக்கம். தொலைந்துவிடும் அபாயம் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் அந்த அபாயமெனக்கு பிடிக்கவே செய்தது பல சமயங்களில். ஒரு கவிஞனாகவோ ஒரு சிறுகதை எழுத்தாளனாகவோ மாறிவிடும் உத்தேசத்துடன் அந்த பச்சை டைரியின் மீது வெள்ளைக் காகிதங்களை வைத்துக் கொண்டு உருப்படியாக நான் எழுதியது ஒரே ஒரு மளிகைச்சிட்டை தான். அதை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நான் ஆளானது ஒரு பெரிய்ய கதை.

வழக்கம் போலவே நான் கவிழ்ந்து உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்த அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே சந்தேகம். மகனுக்குக் கிறுக்கெதுவும் பிடித்து விட்டதோ என்று. ஆனாலும் அவள் ஒரு விதத்தில் திருப்தியடைந்தே இருந்தாள். என் கதா கவிதா முயற்சிகளத்தனையும் எனக்கு வெறுத்தவுடனே நான் செய்யக் கூடிய காரியம் அந்த தாள்களைக் கிழித்தெறிந்த உடன் என் எழுத்தாள தவத்தை கைவிட்டு விட்டு நண்பர்களைத் தேடி தெருக்கடைசியில் இருக்கும் சின்னத்தம்பி கடைக்குச் சென்றுவிடுவேன்.

அந்த நேரங்களில் துப்பறியும் பெண் சிங்கமாக மாறி என் அம்மா என் மாடி அறைக்குள் நுழைந்து நான் கசக்கிப்போட்ட காகிதங்களை எடுத்துப் படிப்பாள். எனக்குப் புரியாத அர்த்தங்களை எல்லாம் புரிந்ததாய் கிளம்பிச் சமையலறைக்குத் திரும்பி ரசத்தையும் குழம்பையும் ஒன்றிணைத்து "ரசழம்பு' ஒன்றை வைப்பாள். நான் அதை சாப்பிட்டு முடிக்கும் வரை முனகுவாள். அவ்வளவே.

அன்றைக்கு ஒரு நாள் நான் அதே மாதிரி எழுத்தாளக் கஜினிமுகமதுவாக என் போராட்டத்தை தொடர்கையில் மாடி ரூம் கதவை திறந்திருப்பதை நான் கவனிக்கவில்லை. அதே நேரம் மின் வெட்டின் புண்ணியத்தால் "திருவாளர் டிவி ட்ராமா" அவர்களும் ஆப்செண்ட் ஆகியிருக்க எதையும் பொருட்படுத்தாத நான் ஒரு கதை எழுதத் தொடங்கி இரண்டு வரிகளிலேயே சப்தமாக சிரிக்க தொடங்கினேன். என் அளவில் அது என் "எழுத்தாள முயல்வு"களில் சகஜம் தானென்றாலும் கூட கீழே இருந்த என் அம்மாவுக்கு அது வித்யாசமாய்த் தோன்றியது. விளைவு? சப்தம் காட்டாமல் சிறு பூனை மாதிரி அல்ல...

பெரிய பூனை மாதிரி ஏறி வந்து என் தலைக்கு மேல் பெருமூச்சு விட்டபடி நின்றதை யதேச்சையாகத் தான் கவனித்தேன்.

"என்னடே எழுதுதே?"

"அம்மா அது வந்து. . "

"பேசாதடே எங்கூட... "என்றபடி கண்ணீர் மல்க அந்த இடத்திலிருந்து நகரத்துவங்க, அவளது கை பற்றினேன் கோபமாக.

"இப்ப என்னாச்சு. . ?ஏன் இந்த அழுக... ?எதுக்குங்கேன். . ?"

அவள் பதில் சொல்லவில்லை. அப்பொழுது தான் என் கையில் இருந்த காகிதத்தை நானே பார்த்தேன். அதில் தலைப்பாக "கல்யாணி கல்யாணி கல்யாணி" என்று மூன்று முறை எழுதி இருந்தது. நான் தலைப்பென்று நினைத்து அப்படி எழுதிய பின் கதை ஒருவரி கூட நகரவுமில்லை. ஆனால் நானெழுதியதை என் அத்தை மகள் அதாவது, என் அப்பாவின் தங்கை மகள் பெயருடன் முடிச்சிட்டு அதையும் கதை எனக் கருதாமல் பொத்திவெச்ச மல்லிகை மொட்டு பீஜீஎம் பின்புலத்தில் என் காதல் கடிதமாகவே எண்ணித் தான் துப்பறியும் சிங்கம் அசிங்கமாய் கண்ணீர் மல்கி இருக்கிறது என்ற தகவல்களனைத்தும் என் ஞான திருஷ்டிக்குப் புலப்பட்டது

"அம்மா. . இது வெறும் கதம்மா... . இதை நீ வேற மாதிரி நெனைக்கே. . "என்றேன்.

"வெரும் கதையில்லடே... காதல் கதை... . அதும் தெரியும்டே எனக்கு. . "

"என்னம்மா காதல்... ஒண்ணுமில்லம்மா... சொன்னா நம்பு... "

"உங்கப்பனப் போலத் தாண்டே நீயும் இருக்கே... நான் தான் புத்தியழிஞ்சு உம்மேல என் உசுரை வெச்சு ஏமாந்திட்டேன். . "

"இல்லம்மா. . இதுல கல்யாணிங்குற பேருக்கு பதிலா சித்ரா'னு எழுதியிருந்தா சந்தோசமா இருப்பே... அப்டி தானே. . ?"

அம்மா ஒரு முடிவுக்கு வந்தவளாய்... "ஆமாம்டே... எங்கண்ணன் மக சித்ரா தான் இந்த வீட்டு மருமகளா வரணும். . இல்லை... நான் "டீவீல வர்ற மாமியாளா மாறிடுவேன். . ஆமா... " என்றாள். எனக்கே என் அம்மாவைப் பார்க்க பயந்து வந்தது. உடனே அந்த தாளை கிழித்து விட்டு இன்னொரு தாளை எடுத்து "சித்ரா சித்ரா"வென அடுத்தடுத்து நான்கைந்து முறை எழுதியதும் அம்மா சந்தோசமாக மாறிப்போனாள். .

எதையோ சொல்லப் போகிறாள் என்று பார்த்தால்... "எனக்கொரு ஒத்தாசை செய்டே. . நீயோ ஆசையா எளுதணும்கே. . ஒரு பேப்பரை எடுத்து நான் சொல்ல சொல்ல எழுது"என்றாள்.

நான் கலவரமானேன். அய்யயோ. . நான் சித்ராவை திருமணம் செய்யச் சம்மதித்ததாய் தப்பர்த்தம் செய்து கொண்டு அம்மா அவள் அண்ணன், அதான் என் மாமர் ராமருக்கு என் கையாலேயே எதும் கடிதம், எழுத முயல்கிறாளா. . ?

"அம்மா... இப்ப எதுக்கும்மா அவசரம்... கொஞ்ச நாள் போட்டும்மா. ". என்றேன். அதற்கு சிரித்துக்கொண்டே "கிறுக்குப் பயபுள்ள. . மாசச் சாமான் வாங்க, மளிகைக் கடைக்கு "சிட்டை எளுதணும்"லா. . ?" என்றாள்.

நான் நிம்மதியாகி எழுதியது தான் அந்த சிட்டை. சித்ராபுயல் சிட்டையாக மாறிக் கரையைக் கடந்தது. அது நடந்து எனக்கும் சித்ராவுக்கும் வெற்றிகரமாக திருமணமெல்லாம் முடிந்து, என் அம்மா என் அப்பாவுடனான "இரண்டாம் பானிபட்டுப் போரில்" வென்ற திருப்தியடைந்து இப்பொழுது சித்ரா ஐந்தாவது மாத கர்ப்பமாக அவள் அப்பா அதாவது மாமனாரான என் "மாமர்= ராமர்" வீட்டுக்கு செல்ல கூடவே என் அம்மாவும் தன் பிறந்த வீடான அதே வீட்டுக்குச் சென்றுவிட்டாள். என் அப்பாவும் நானும் மட்டும் இருக்கையில் பழைய நினைவுகளோடு எப்படியும் இன்றைக்கு அந்த பச்சை டைரியை கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் ஒன்றரை மணி நேரமாய்த் தேடிவருகின்றேன்.

கல்யாணமாகி ஒரு மாதம் கழித்து எதையோ எடுக்கையில் அந்த பச்சை டைரி கீழே விழ, அதை எடுத்த என் மனைவி சித்ரா. ஆசையாய் என் அருகில் வந்தாள். "ஏன் மாமா. . இந்த டைரி நீங்க தான் எளுதலியே, எதும் எங்கப்பாவுக்கு குடுத்தா எதாச்சும் எளுதுவாருல்ல. . ?"

"ஏன்... எங்கப்பாவுக்கு எழுதவராதா. . ?"எனக்கேட்டேன்.

மறுதினம் எல்லாருமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் என் அப்பர் என்னை ஆழமாய்ப் பார்த்தார்.

"என்னப்பா... ஒரு மாதிரி இருக்குதே பார்வை. . ?"

"ஏண்டே. . 'எதிர்சீர்' கணக்கா எம்மருமக எதோ டைரி கேட்டாளாமே உங்கிட்டே... முத முதல்ல அந்த புள்ள வாய திறது கேக்குறத வாங்கியாச்சும் கொடுக்கவேண்டாம். . ?இருக்குறத கொடுத்தா என்னடே. ?"

நான் அமைதியாய் இருந்தேன். எனக்கு இன்னொருவன் கொடுத்த பரிசு அது என்பதை இனி விளக்க முடியாது. எத்தனை பிடிவாதமிருந்தால் நான் சொன்ன பதிலுக்கு அப்புறமும் என் அப்பாவிடம் வந்து கேட்டிருப்பாள். . ?இதற்கும் சேர்த்து தான் சொல்லியிருப்பார்கள் சொந்தத்தில் பெண் எடுத்தால் சிரமம் என்று.

அடுத்த நாளே "ஆர்ச்சீசில்" வாங்கிவந்த ஒரு சுமாரான டைரியை அவளிடம் கொடுத்து " உங்கப்பா கிட்டே கொடுத்துரு" எனக் கொடுத்தேன். ஆழமாய்ப் பார்த்தவள் அதை வாங்கிக் கொண்டாள். அதன் பின் நான் சென்னைக்கு வேலையாகி சென்றதிலிருந்து என்ன ஆனது அந்த டைரி என நெடுநாட்களுக்கு கவனிக்கவில்லை. . அன் செலக்டிவ் அம்னீசியா மாதிரி ஒரு வியாதி என்னைத் தாக்கியிருக்குமோ என நானே சந்தேகப்படுமளவுக்கு. அதைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த பொங்கல் விடுமுறையிலும்.

பொங்கலுக்கு என்னை வரச்சொல்லி சித்ராவும் என் அம்மாவும் தொலைபேசியில் என்னை அழைக்க, என் "மாமர்=ராமர்" கூட சேர்ந்து என்னை அழைத்தார். நான் பிடிவாதமாக எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். வர முடியாதென்று.

"என் முக்கியமான செர்ட்டிஃபிகேட் ஒண்ணு காங்கலை. அதை தேடிகிட்டு இருக்கேன். . நான் வர்லை. "என்றேன். என் அம்மா அந்தபக்கம் முனகுவது எனக்கு கேட்காமல் இல்லை. . "என்னத்த படிச்சு கிளிச்சாம்னு செர்டிஃபிகேட்ட தேடுதாம்... . கோட்டிப்புள்ள"

எதையும் நான் செவிமடுக்கவில்லை. அன்றைய இரவு மறுதினம் விடிந்தால் பொங்கல் என் அப்பரும் கூட என் மாமர் வீட்டுக்கு கிளம்பிச்சென்றுவிட நான் மட்டும் இருந்தபடியால், எனக்கு துணைக்கு என் டைரிதந்தவள்ளல் செல்வத்தை அழைத்தேன். அவன் வருகையில் சும்மா வராமல் தீர்த்தபாத்திரங்களுடன் வந்து நின்றான். உடன் மகேந்திரன் வேறு. செல்வம் தந்த டைரியை தொலைத்துவிட்டேன், தேடுகிறேன் என அவனிடமே எப்படிச் சொல்வேன். . ?

அன்று எதை எதையோ பேசிச்சிரித்தோம். பொழுது கழிந்தது. அவர்கள் விடை பெற்றுச்செல்கையில் அவ்வளவு போதையில் என்னிடம் செல்வம் கேட்டான் "ஏண்டே... டைரி எளுதிமுடிச்சிட்டியா. . ?"நான் மையமாகச் சிரித்தபடி ஒன்றும் சொல்லாமல் விடையளித்தேன்.

பொங்கல் விடுமுறை முழுவதும் என்னால் அந்த டைரி இருக்குமிடத்தை கண்டடைய முடியவே இல்லை. கடைசி ஒரு நாள் மாமர் ஊருக்கு சென்று தலையைக் காட்டிவிட்டு, வேறெதையும் காட்டிவிடாமல் பொங்கல் தின்ற பஞ்சாப் சிங் மாதிரி விழித்துவிட்டு அப்படியே சென்னை சென்றுவிட்டேன். சென்னையில் "இந்தியன் படத்துச் சின்ன கமல்" போன்றதொரு நண்பரின் அறிமுகம் கிட்டி, வேறொரு லைசென்ஸ் புதிதாக எடுத்த பின் அந்தப் பிரச்சினை தீர்ந்தது ஒருவழியாய். அதன் பின்னர் நாலு மாதங்கள் கழிந்தது. மே மாதம் எங்கள் கம்பெனியில் "பிசினெஸ் ப்ளானெர்" ஒன்று கொடுத்தார்கள். இந்த ப்ளானெர் முழுக்க லெதரில் இருந்தது, ஒஸ்தி விலை என்பது தோற்றத்திலேயே தெரிந்தது. அதன் உள்ளே க்ரெடிட் கார்டுகளை வைக்கும் ஃபோல்டர்கள், கடிதங்களை வைக்க தனியறை. பொதிந்து வைத்திருந்த கால்குலேட்டர், பணம் வைக்க தனியறை, இது தவிர வருடம் குறிப்பிடாமல் ப்ளானெர் காகிதங்கள். பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். சம்மந்தமின்றி என் ஊரில் தொலைத்த பச்சை டைரி பற்றிய ஞாபகம் வந்தது. எனக்கு ப்ளானெரை டைரியுடன் ஒப்பிடவே இயலவில்லை. என்ன தான் வசதியாய் இருந்தாலும், அந்த டைரியின் அழகே தனிதான். . என் கனவுகளில் எப்பொழுதாவது அந்த பச்சை டைரியும் இந்த ப்ளானரும் என் கையில் இருப்பது போல தோன்றுகிறதா என அடிக்கடி சோதித்துப் பார்த்தேன். கனவில் கூட கிடைக்கவே இல்லை அந்த டைரி.

ஜூன் ரெண்டாம் தேதி எனக்கு ஆண்குழந்தை பிறந்து இருப்பதாகவும் அது அப்படியே என் மாமர்=ராமரை உரித்து வைத்திருப்பதாகவும் சித்ராவும் என் அம்மாவும் மாறி மாறி போனில் சொல்லி மகிழ்ந்தார்கள். அப்படி உரித்தெல்லாம் வைத்து பிறந்திருக்க மாட்டான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு என் மாமர் ஊருக்குப் ப்ரயாணித்தேன். வாசலிலேயே என்னை வரவேற்றவர் என் மாமர்=ராமர் தான் "மாப்ளே... சும்மா சொல்லக்கூடாதுவே... சாதிச்சுப்டீருல்லா. . ?"என்றார்.

எனக்கு என்ன சாதித்தேன் எனப் புரியவில்லை. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் ஒரு கல்யாணமாகி ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை தானே பிறந்திருக்கிறது. . ?அதில் என்ன சாதனை. . ?ஒருவேளை என் அம்மா அடித்துச் சொன்ன மாதிரி குழந்தை அச்சு அசலாக தன் தாத்தர் ராமர் மாதிரியே பிறந்து தொலைத்திருக்கிறானா. . ?திகிலடைந்தேன். அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்திருக்குமே ஆனால் பெற்ற பச்சிளம் குழந்தையை விவாகரத்து மாதிரி ரத்து செய்த முதல் தகப்பனாக நான் வரலாற்றில் இடம்பிடித்து விடும் உத்தேசத்துடன் உள்ளே நுழைந்தேன்.

என் அம்மா என் குழந்தையைக் கொஞ்சும் சாக்கில் எனது மன நிலையைச் சந்தேகித்துக் கொண்டிருந்தாள். "ஏன் தங்கம்... என்னமா முளிக்கான்... இதோ உங்கப்பன் கிறுக்குப்பய வந்திட்டான் என் பேரனைக் காங்க. . "என்று சிரித்தாள். நான் அமைதியாக சென்று என் பையை வைத்துவிட்டு எதற்கெனத் தெரியாமல் கண்ணாடி பார்த்துவிட்டு என் அம்மா கையில் இருந்த பச்சிளம் மகனைப் பார்த்தேன். சத்தியமாக அவன் என் மாமர்=ராமரை எந்த வகையிலும் நினைவுபடுத்தவே இல்லை. மேலும் எப்படி பிறந்து இரண்டு நாள் ஆன குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் இஷ்டத்துக்கு ஜாடை சொல்கிறார்கள் என்பதும் புரியவே இல்லை.

என் கரங்கள் நடுங்க குழந்தையை கொஞ்ச நேரம் வைத்திருந்து விட்டு தொட்டிலில் இட்டேன். பக்கத்தில் சித்ரா அயர்ந்து உறங்கிக்கிடக்க மெல்ல கூடத்துக்கு வந்தேன். என் மாமர் ராமர் நடுநாயகராய் அமர்ந்து தன் நாட்டாமை மீசையை வருடிக்கொண்டிருந்தார். சுற்றிலும் என்னவோ அவர் சதமடித்த சச்சின் போல ரசிகர்களாய் வீற்றிருந்தனர் சொந்தங்கள். "என்ன மாப்ளே. . எத்தனை நாள் லீவு. . ?"என்றார் என் மாமர் ராமர். அவரருகில் பயில்வான் ரங்கநாதன் போல இன்னொருவர் அவரை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. பயில்வான் ரங்கநாதனைப் பல படங்களில் பார்த்திருக்கிறேன்.

"மாமா... நான் நாளைக்கு நெல்லைல கெளம்புதேன். "

"ஏன் சுருக்க. . ?"என்றார். .

"லீவு கெடைக்கணும்லா... மெட்ராசுல எவன் தேவைக்கு லீவு கொடுக்கான். . ?"என்றார் பயில்வான்.

"ஓ. . செரி. . செரி. . "என்றார் மாமர்.

வேளா வேளைக்கு சாப்பிட்டேன். டீவீ பார்த்தேன். வெளியில் சென்று வந்தேன். மறு நாள் காலை நெல்லையப்பர் கோயில் சென்று வந்தேன். என் மனைவி, மகன் பெற்ற மாதரசியாக கொஞ்சம் என்னிடமே கர்வமாகப் பேசினாள். என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தேன். இதில் அடிக்கடி என் மாமர் மாதிரி இருப்பதாக குழந்தையைத் தொடர்கொஞ்சல் செய்து என்னைக் கொடுமைப் படுத்தினர். நான் மெல்ல நழுவி என் மாமர் வீட்டு மாடிக்கு வந்தேன்.

இந்தக் கதையை இன்னமும்நீட்டிக் கொண்டு போக விரும்பவில்லை. மொட்டைமாடிக்குச் சென்று ஒரு திருட்டு தம் அடிக்கும்உயரமான லட்சியத்துடன் நகர்ந்தேன். தட்டு முட்டுச் சாமானங்களையெல்லாம் அடைத்து வைத்துஅதற்கு இங்க்லீஷில் பேர் வைத்திருந்தனர். ஸ்டோர் ரூமாம். அதற்கு யாருமே வரமாட்டார்கள். அதையும் இதையும் மெல்ல நகர்த்தி மாடிப்படிகளை அடைந்து விட்... . "

"என்ன அது... ?"ஒரு அண்டாவில் சகல சாமான் களோடு மத்தியில் அட்டைகிழிந்து ஒரு டைரி. கிட்டத்தட்ட என் பச்சை டைரியே தான். அதை உருவ முயன்றேன். ஒரு நிமிடம் யோசித்தேன். என்ன இது. . ?என் மாமர் வீட்டிற்கு நான் வந்த இடத்தில் துப்பறிந்து கொண்டு. . ?யாராவது பார்த்தாலோ கேட்டாலோ என்ன நினைப்பார்கள். . ?ஒருவேளை அது என் டைரியாக இல்லாவிட்டால்... ?அதை உருவுவதை விட்டுவிட்டு நான் மெல்ல கீழிறங்கினேன். . சற்றுநேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டு சென்னை செல்வதற்காக திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.

மெல்ல இப்பொழுது நகரத் தொடங்கியது நெல்லை. . நாளை காலை சென்னை. என் சமீப மகன் எந்த அசைவுமின்றி என்னுடனேயே பயணிப்பதைப் போன்ற உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை நான் தொலைத்தபொருள் என் லைசென்ஸ் தான். அதற்கு மாற்றாக இன்னொன்று சென்னையில் வாங்கியாயிற்று. நான் தொலைத்த டைரி. . என்னங்க இது. . ?எங்கோ என் வீட்டில் தொலைத்தது. இங்கே எப்படி. . ?

நீங்கள் நினைப்பது புரிகிறது. அவ்வளவு தேடலுக்குரிய டைரியை என் மாமர் வீட்டு மாடியில் எளிதாக எடுத்து அதுதானா என சோதித்தறிந்திருக்கலாம். அதன் கடைசிப் பக்கத்தில் ஒருவாசகம் எழுதி இருப்பேன். அதைக் கிழித்திருந்தாலும் ஊர்ஜிதம் செய்திருக்கலாம்... எனக்கும் தெரியும். இருந்தாலும் கூட, என் டைரி இல்லை அது. நான் நம்புறேன். அப்புறம்... அந்த டைரிவாசகம்... . "நம்பிக்கையே வாழ்க்கை. . "

Pin It