துள்ளிக் குதித்தோடி
வரும் சொற்களை
நீ கேட்கத் தயாரில்லாத நிலையில்
ஆர்ப்பாட்டமோ,
கூச்சலோயின்றி
வெளிநடப்பு செய்கின்றன
சோர்ந்த சொற்கள்..

------------------
உன் காதுமடல் கூட
அறியாது
உன் மீசையோடு
நான் பேசும் இரகசியங்களை...
------------------------------

எனதுளறலை
உனக்கு உண்மையாகவும்
எனதுண்மையை
உனக்கு உளறலாகவும்
அறியத் தரும்
கையாலாகாத சொற்களை
வைத்துக் கொண்டு
என்ன செய்ய?
------------------------

சொற்களாலோ
செயல்களாலோ
உன் மீதான நேசத்தின்
முழுப்பரிமாணத்தையும்
காட்டவியலாத போது
பால்கட்டிக் கொண்ட
மார்பின் வலியுணர்கிறேன்..
--------------------------------------

எப்போது
கவிதை எழுதுவீர்களென
கேட்பவர்களுக்கு
ஓரப்புன்னகையையும்
சமாளிக்கும் வார்த்தைகளையும்
பதிலிறுக்கிறேன்..
உன் நினைவென்னை
கொன்று போடும் சமயங்களில்
உன் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையுற்று மயங்கிச் சரிகையில்
உன் ஓரிரு சொற்களென்
உயிர் குடிக்கையில்
அடம்பிடித்து பிடிவாதமாய்
சண்டையிடுகையில்
இப்படியான பதில்களையும்
இதற்கு மேலானவற்றையும்
நீயே அறிவாய்..
துடிப்பறியும் இதயமாய்..
-------------------------------------

என் இரவை பகிர்ந்தளிக்க யாருமில்லை
என் தூக்கத்தை நீயே தூங்குகிறாய்..
என் உணவு வேளையில் உடன்வர யாருமில்லை
என் பசிக்கும் சாப்பிட்டு விடுகிறாய்..
என் சிந்தனையைக் கேட்பதற்கு யாருமில்லை
எனக்கும் சேர்த்து சிந்திக்கிராய்
என் வாழ்க்கையை நீட்டிக்க விருப்பமில்லை
எனக்கும் சேர்த்து வாழ்ந்திருப்பாய்
----------------------------
உன்னோடு
நான் சேரும் நாளில்
பூமியின் எடை குறையும்
என் பாரத்தின்
சுமை நீங்கி..
-----------------------------
- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
மால்கம்X இராசகம்பீரத்தான்
கிரங்கடிக்கும் உங்கள் சொற்களின் வெளி நடப்பினை
நான் பாராட்டாமல் இருந்தால்
அது என் ஆணவத்தின் உள்ளிருப்பாகிவிடும்.

மிகவும் தரமான கவிதை....தொடர்ந்து தொடர்ந்து உங்கள் கவிதைகள் வெளி நடப்பு செய்ய
எனது வாழ்த்துக்கள்...

மால்கம் X இராசகம்பீரத்தான்.
ameer abbas
உங்கள் கவிதையை விட்டு மனம் வெளி நடப்பு செய்ய மறுக்கிறது. அன்புடன் அமீர் அப்பாஸ்
ival bharathi
iமால்கம் X இராசகம்பீரத்தான்.... அமீர் அப்பாஸ்...தங்களின் பாராட்டிற்கு என் நன்றி - இவள் பாரதி
Guest
//எனதுளறலை
உனக்கு உண்மையாகவும்
எனதுண்மையை
உனக்கு உளறலாகவும்
அறியத் தரும்
கையாலாகாத சொற்களை
வைத்துக் கொண்டு
என்ன செய்ய?//

மிகவும் ரசித்தேன் இக்காட்சியை..
தனிமையின் வலியை, ஒரு சந்திப்பிலிருந்து பறித்து நம்மிடமே தந்து விடுகின்றன அந்தச் சொற்கள்..
satheesh muthu gopal
உன்னோடு
நான் சேரும் நாளில்
பூமியின் எடை குறையும்
என் பாரத்தின்
சுமை நீங்கி..

arputhathin ucham intha ezhuthukkal

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.