மாலைநேரத் தணிவெயில் போலவே
மெதுவாய் தேய்ந்தழியத் தொடங்குகிறது
உன்னை
வழியனுப்பித் திரும்பிய
வாகனத்தின் இயங்கோசை
இறுதி ஸ்பரிசங்களால் திளைத்திருக்கும்
நீளஅங்கிக்கு விடைதர மனமின்றியே
புதைந்து கொள்கிறேன்
முன்னறையின் நாற்காலியொன்றுக்குள்.
உன் செல்லங்கொஞ்சலின்
இன்மையிலிருந்து விடுபடுமாப்போலே
கரடிபொம்மைகளோடு
கதைபேசத் தொடங்குகிறான் குழந்தை.
தேவைப்படாத இராவுணவிற்கான தோசைமாக்கரைசல்
குளிர்ப்பெட்டிக்குள்ளே
குமிழி விடத் தொடங்குகிறது.
இனி
மறுவிடுமுறை வரைக்கும் சதா
ஒலித்துக் கொண்டே இருக்கப்போகிறது
நீ
பார்த்துப் பார்த்துக் கட்டிய அறைக்குள்
பாலைத்திணையின் வெம்மை வரிகள்
மீளவேண்டுமே
உந்தன்
கனிவு மிகைத்த கிண்டல்மொழிகளோடிணைந்து வரும்
நகையொலிகளுக்குள்
நம் எல்லா ஜன்னல்களும் மௌனம் உடைந்திட
- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (