இப்போதெல்லாம் உலக மகாமரம்
வெறும் பச்சைப்பொய்களாகவே தன் காய்களைத்
தொங்கவிடப் பழகியிருக்கிறது.
எதைவிடுவது? எதைத் தொடுவது?
எங்குமே –
நாறும் கானில் நனைந்த வன்னுரையாய்
ஊறிப் பருத்துக் கனமேறிய பொய்கள்
நிரம்பி உடைந்து பரவியோடும்
மலக்குழி நீராய்……
சாக்கடையாய்……
குப்பைத் தொட்டியின் அழுகிய
மாமிசத் துணிக்கைகளாய்……
நெற்றிப் பொட்டும் நாசித்துளைகளும்
ஒருங்கே சுருங்க
சுவாசச் சிற்றறைகளை
வாந்திக்குத் தயார் படுத்தும்
நாற்றமிகு பொய்கள்……
உறவுக்குள்ளும்……
தோழமைக்குள்ளும்……
காதலுக்குள்ளும்……
கடமைக்குள்ளும்……
அரசியலுக்குள்ளும்……
அதிகாரத்துக்குள்ளும்……
சேவைக்குள்ளும்……..
ஊடகங்களுக்குள்ளுமாயென
நீளுமிப் பொய்மையின் பட்டியல் நிரப்பிட
நிரப்பிட வேணுமோ என்
பேனாவின் ஒல்லிக்குச்சிக்குள்ளே
ஒருகோடி சமுத்திரங்களையே....!
இனியும்-
மெய்யாகிக் கனிந்தொழுகும்
கனிகள் நாமும் காண்பதெப்போவெனக்
குசுகுசுத்தபடியே சும்மா குந்திடாமல் கொண்டுவா
பொத்தல்களேயற்றதோர் உரப்பை.
அடித்துப்பிடித்தாவது ஆய்ந்தெடுத்துக்
கட்டியிறுக்கியே சுனாமிக்கும்
கரை தட்டாதபடிக்கோர்
ஆழக்கடலிலே வீசிவிட்டு வருவோம்
அத்தனை பச்சைப் பொய்களையும்.
-கிண்ணியா எஸ்.பாயிஸாஅலி (