கீற்றில் தேட...


Goddessபட்டினியில் பரிதவித்து
உதிர்ந்துபோகும் உயிர்களை
உடனடியாய் காப்பாற்ற
கால் கிலோ கடவுள் வேண்டும்...

ஜாதிகளால் மதங்களால்
வெட்டிச்சாகும் வீணர்களை
உடனடியாய் கொன்றுபோட
கால் கிலோ கடவுள் வேண்டும்...

லஞ்சமும் ஊழலுமாய்
வஞ்சம்செய்து வாழ்வோரை
உடனடியாய் கழுவிலேற்ற
கால் கிலோ கடவுள் வேண்டும்...

அமைதியின் சந்நிதியாய்
வன்முறையற்ற சமுதாயத்தை
உடனடியாய் அமைத்திட
கால் கிலோ கடவுள் வேண்டும்...

எங்கே கிடைப்பார் இந்த கடவுள்?
தூணிலும் இருப்பாராம்...
துரும்பிலும் இருப்பாராம்...
சிரிப்புதான் வருகிறது!
ஒருகிலோ கடவுளுக்காக
உலகெங்கும் அலைந்துதிரிந்து
ஏமாற்றத்தின் மிகுதியில்
வானொலிக்கு செய்தி கொடுத்து வந்தேன்...

வீட்டிற்குள் நுழைந்ததும்
வானொலி ஒலித்தது...
"காணாமல் போனவர்கள்
பற்றிய அறிவிப்பு...
கடவுள் என்ற ஆயிரம்கோடி
வயதான இளைஞரை
மனிதன் தோன்றிய
காலம் முதல் காணவில்லை...
காணாமல் போன அன்று
இரத்த நிறத்தில்
புத்தாடை அணிந்திருந்தார்...
இவரைப் பற்றிய தகவலறிந்தால்
தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள்...
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா,
இந்தோனேசியா, ஆப்ரிக்கா, சீனா,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,..........................
........................................................................."!!!

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)