கீற்றில் தேட...

Kutty Revathi


உடலுக்குள்ளேயே உடலைத் தின்று
வளரும் மனம் எனது பாடலின் தூரங்களையும்
அர்த்தங்களையும் அறிந்திருந்தது
ரகசியமாய் நான் வரைந்துவைத்திருந்த
நிர்வாண ஓவியங்களையெல்லாம்
அரித்துத் தின்றுபெருத்தது
காலை முதல் நிலவு திரும்பும் வரையிலான
என் புல்லறுக்கும் அசைவுகளில்
ஒடுங்கி உறங்கியது
உடலைச் கிளைகளாக்கிப் பறவைகள் வந்தமரச்
சிலிர்த்து நெளிந்தது
இன்னுமொரு பாடலுக்காய்த்
திரைகளை அவிழ்க்கும்போது
என் இதயத்திலிருந்து வெளியேறுவேன்
காளான்கள் பூக்கும் மழைஇரவில்
என் தந்தையின் விதைகள் வீழ்ந்த
நிலத்தைக் கண்டடைந்து
ஒரு மரமாய் முளைத்தெழுவேன்
அழுகத் தொடங்கியிருக்கும் என்னுடலில்
துடிதுடித்து அழும் அப்புழு

குட்டி ரேவதி