மின்வரட்டைகள்

பெருநகரத்தை இணைத்து
கூரையிலும் பயணித்து
குவிந்து நிறைந்திருக்கும் பெருங்கூட்டம்
பெருங்குவியலூடே நிற்கிறேன்
துணையற்றத் தனிமையை
விழுங்கி செரித்து.
2. பாதங்கள் அனுமதித்த
இடைவெளியில் செருகிக்கொள்வேன்
கைப்பிடியிலும் தொங்கி வருவேன்
மூச்சிருக்கும் துணிக்கடை பொம்மையாய்
ஏற்றி இறக்கித் தள்ளும்
இயந்திரக் கூட்டம்
கண்மூடிப் பயணித்து திறக்க
கோப்புகளுடன் வரவேற்கும் அலுவலகம்
3. மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில்
பயனற்று வழியும்
சக்தி
4. கால்களில் சிறகு
முளைத்தவனுக்கு
கூடடையும்போது
வரமறுக்கும் தூக்கம்
உளைச்சலைத் தணிக்க உதவும்
உறக்க வில்லைகள்
5. ஒரு ராட்சச மிருகத்தைப்போல
விழுங்க யத்தனிக்கும்
பெருநகரப்பிடியிலிருந்து தப்பிக்க
லாகிரி நுகர்ந்து
சுய மைதுனத் துணையுடன் தூங்கி
விழித்து வாசல் திறக்க
கதவருகே காத்து நிற்கும் வேகம்.
- அன்பாதவன், மும்பை