கீற்றில் தேட...


Indian villageதவளைகளைப்
பெய்கிற மழை

கொக்குகள்
காய்க்கிற மரம்

சாரைகள்
கண்ணுறங்கும்
நெடுவயல்

தானியம்
நிறைந்த குதிர்

தோள் தூக்கிச்
சுமக்கும்
தாய்மாமன்

காசுதருகிற
அத்தை

தாயமிடும்
அவள் மகள்

தம்பியின்
ஈரக்காலில் இறங்கிய
கருவமுள்ளை
கிளறியெடுக்கிற
அக்கா

ஊர்தாங்கி
நிற்கிற ஆல்

கரிந்து திமிர்ந்து
மேற்பார்வை செய்யும்
பனைகள்

கைகாட்டி
முன்னேகும்
வரிசைப்
புளியமரங்கள்

வாழைத் தோப்பின்
இலை விரிந்து
மூடிய வானம்

தரைக்கு
ஒருசாண் மேலே நேர்க்கோட்டில் பறந்து
ஈசலை
இரையெடுக்கும்
தைலான்

தானியம்
உடைத்து உடைத்து
பூமி சுற்றாவிட்டாலும்
தான் சுற்றும்
திருவைக்கல்

வடக்கே
வாழவந்த அம்மன்

தெற்கே
ஆனைக்காரன்

மேற்கே
கூடாரத்தம்மா

கிழக்கே
உச்சி உடையார்

நாலுபுறமும்
குளங்கள் சூழ்ந்தாலும்
ஒன்றின் பெயர்
ஊருக்கானது
மலையாங்குளம்

வே. ராமசாமி