கீற்றில் தேட...


பக்கத்து வீட்டு
செல்வியும் நானும்
ஆடிய
அப்பா அம்மா
விளையாட்டில்
நான் அவளுக்கு
கட்டிய முதல்
மல்லிக்கொடி தாலி.
நானும் அவளும்
மாறிமாறி
பொம்மக்காவுக்கு
கொடுத்த முதல்
ஆசை முத்தம்.
நானே செய்து
அவளுக்கு மாட்டிவிட்ட
முதல் ஒலை வளையல்.


யாருக்கும் தெரியாமல்
அவள் வீட்டு
தோட்டத்திலிருந்து
பறித்து
அவளுக்கு
சூட்டிவிட்ட
முதல் காகிதப்பூ.
நான் அவளிடம்
சொன்ன முதல்
காதல் வார்த்தை
‘உன்னை எனக்கு
ரொம்ப புடிக்கும்டீ
செல்வி'.
நான் அவளுக்கு
கொடுத்த
முதல் காசு
பத்து பைசாவில்
வாங்கிய
பத்து ரூபா.
நானும் அவளும்
ஆடிய முதல் ஆட்டம்
கண்ணாமூச்சி
‘ரே... ரே...
காட்டு மூச்சி
ரே... ரே...'

அஞ்சாங்கிளாஸ்
படிக்கும் போதுகூட
என்னைப் பார்த்து
சிரித்து
கண்ணை பொத்திக்கொண்டு
போனவள்
என்னதான் இப்போது
பட்டினத்தில் படித்தாலும்
ஊருக்கு வரும்போதுகூட
என்னைப் பார்க்க
வருவதில்லை.
பாட்டியிடம் சொன்னால்
அவள் பெரிய மனுசிடா
என்கிறாள்.
அப்படியானால்
என்னை மட்டும் ஏன்
வீட்டில் எல்லோரும்
கன்னுகுட்டி கன்னுகுட்டி
என்கிறார்கள்.

இலாகுபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)