நீங்கள் மாற்றுடையை நீட்டுகிறீர்கள்வன்னி தடுப்பு முகாம்
அவன் இருப்பதையும் அவிழ்த்துவிட்டு
அடுத்து என்னவென கேட்கிறான்

சீழ்கட்டியை காட்டி
அழுகிவிட்டது என்கிறீர்கள்
நசுக்கிப் பார்த்துவிட்டு
துர்நாற்றமில்லையென சொல்கிறான்

வேலிக்குள் கிடப்பவை
கிடை ஆடுகள் என்கிறீர்கள்
அவன் குறிகளை நெறித்துவிட்டு
சண்டைக் கிடாய்கள் என
சத்தியம் செய்கிறான்

நாட்டாமையே உள்வரக்கூடாதென
தீர்ப்பு சொல்கிறான்
நீங்கள் கிழிந்துபோன
முரசையடித்து ஒலிஎழுப்பப் பார்க்கிறீர்கள்

நாங்கள் வழக்கம்போல
பாட்டு பாடுகிறோம்
இந்த வரிகள் புரிந்தோர்
தலையாட்டி செல்வர்
புரியாதார் எல்லாம்
பைத்தியக்காரனின் கவிதையென
கைகொட்டி செல்வர்
இந்நேரம் இந்த கவிதையின்
தலைப்பையே மறந்திருப்பர்
இப்போது இந்த கவிதையையும்!

- ஜனா கே

 

 

Pin It