கீற்றில் தேட...

செம் பருத்தி முகத்தில் புன்னகை காட்டி
செங் காந்தள் விரலில் அர்த்தம் கூட்டி
கண் விழி அம்பில் கணை ஏற்றி
கலக்கி விட்டாள் என் இதயக் குளத்தை

முல்லைச் சிறு சிரிப்பில் முத்துக் காட்டி
முன்னைக் கொன்ற இதயம் மீண்டும் கொன்று
மோகனக் குன்(று) அசைவில் மோகம் தூவி
முழுவதும் தள்ளி விட்டாள் காதல் குளத்தில்

பற்றிக் கரை ஏற பாவை மகள்
பட்டுத் துணியின் சருகைக் கரை நீட்டி
சொட்டச் சொட்ட நனைந்த என் மனது
சொக்கிப் போக முழுவதும் நனைய விட்டாள்

எச்சிச் சிறு வாணம் எகிறிப் பறக்கும்
எள்ளல் பொறி சிரிப்பு எண்ணில் அடங்காது
முக்கிப் பொதி சுமக்கும் கழுதை மனது
மோகத் தீயில் எரிந்து கருக வைத்தாள்

நன் செய் நிலத்து நாணல் போல்
வன் செய் உன் மனத்து வம்புகளால்
வளையாத திடம் கொண்ட நல் மனதோடு
வாழ்க்கையில் ஈடேறும் வரம் ஒன்று வேண்டும்


இளந்திரையன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)