
ஆடி ஓடி தேடிக் கட்டியாகிவிட்டது
அழகிய சிறு வீடு
தென்னையின் வடக்கு மட்டையில்
கொஞ்சலும் குலாவலுமாகக் குஞ்சு
வைத்தாகிவிட்டது
சில நாட்களுக்குள்
அவ்வப்போது கீச்சலுடன் செவ்வாயைக் காட்டி
எம்பிக்கொண்டிருந்தது
வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகின்றன பறவைகள்
கூட்டைவிட்டு வெளிவந்து உடல் கோதியது
பிறகு ஒவ்வொரு மட்டையாக
தாவித்தாவி அமர்கிறது
அதன் முதல் பறத்தலைப் பார்க்கவேண்டுமே
சில நாட்களாகத் தொடர்ந்து மரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இன்று வெகுஉற்சாகத்துடன் இருக்கிறது
பரபரப்புடன் இங்கும் அங்கும் தாவித்திரிகிறது
இருந்த இடத்திலேயே பறந்து பறந்து அமர்கிறது
சட்டென்று சிறகுகளை விரித்து
பறந்துவந்து மாடிக் கைப்பிடிச் சுவரில் அமர்கிறது
சிறுவயதில் மரமேறிக் கூட்டைக் கலைத்து
சுட்டுத் தின்ற பச்சைக் கூழாங்கற்கள்
வயிற்றுக்குள் எத்தனைக் காகங்கள்
சிறகு விரித்துக் காத்துக்கிடக்கின்றனவோ?
- மாலதி மைத்ரி