
நான் வருவதற்குள்
தூங்கிவிடுகிறாய்
நீ எழுவதற்குள்
புறப்பட்டுவிடுகிறேன்
உனக்காக
வாங்கி வந்தவைகளை
ஒருபோதும் தரமுடிந்ததில்லை
பொங்கும்
முகம் பார்த்து
பிஞ்சுப் பாதங்களில்
சமர்ப்பித்துக் காத்திருப்பேன்
இயல்பான உன் விழிப்பிற்கு
டீச்சர் நினைவில்
அலறி எழுந்து
‘அப்பா அப்பா’ என்று
கட்டியணைப்பாய்
தாயை
ஏக்கம் பார்த்து வெதும்பி
மறுபடி உறங்கத் தொடங்கிவிட்ட
உன்னை ரசிப்பதில் கழியும்
அதற்குப் பிறகான ராத்திரி
விடியலில்
மனமின்றிப் பிரிவேன்
விடுமுறைக்காக
முத்தங்களை சேமித்து
அன்றைய பகல் பொழுதை
உயிர்ப்பாய் வைத்திருக்கும்
சட்டையில் வீசும்
உன் மூத்திர வாசம்
- மாறன்