தலையில் நாறும் காக்கை எச்சம்
'பகுத்தறிவு' இங்கு விதியாக.....
நாய்க்கு உண்டு நெஞ்சணைத்து முத்தம்
தன்னின மனிதர் தொட்டாலே தீட்டு
'நாகரீகம்' இங்கு விதியாக.....
எச்சிலுறும் நாய்களுடனே போட்டி
எச்சில் இலைக்கு பாயும் மனிதன்
'பசிக்கொடுமை' இங்கு விதியாக.....
மழைக்குப் பயந்த ஒழுகும் குடிசை
மனதில் லாட்டரியின் ஆகாசக் கோட்டை
'சோம்பல்' இங்கு விதியாக.....
வறுமையில் மூழ்கிடும் குடித்தனம்
வழமையாய் தலைவன் 'குடி'த்தனம்
'கவலை' இங்கு விதியாக......
ஈர்த்தவரோடு இணைந்து ஓட்டம் - தன்னை
ஈந்து, தவித்துப் பின் திண்டாட்டம்
'காதல்' இங்கு விதியாக......
மகனின் திருமணத்தில் மாவீரப்பேச்சும்
மகளின் திருமணத்திலோ கைதிபோல கூச்சம்
'சம்பிரதாயம்' இங்கு விதியாக.....
படித்து உயர்ந்தால் பொருளீட்டலாம்
பொருளை ஈந்தாலே படிப்பினை பெறலாம்
'கல்வி' இங்கு விதியாக.....
'என் கையிது எப்படியும் வீசுவேன்
மூக்கு உனது. முடிந்தால் நகர்த்து'
'கருத்துச்சுதந்திரம்' இங்கு விதியாக......
தீக்குளித்திடும் தகுதி
தொண்டனுக்கே எப்போதும்
'அரசியல்' இங்கு விதியாக......
புனிதம் விதைக்கும் பெருமிதமாக
மனிதம் சிதைத்து இரத்த தீர்த்தம்
'மதம்' இங்கு விதியாக......
அறியா சனங்கள் கையிலே
அரியாசனங்கள்
'ஜனநாயகம்' இங்கு விதியாக.....
இனியேனும் செய்வோம்
வேறு விதிகள்.
- பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்