Child
அப்பா இல்லாத
அம்மா...
அம்மா இல்லாத
அப்பா...
அன்றாடம் எனக்குப்
பாலபாடம்

பள்ளிக்குச்சென்று
வீடுதிரும்பினால்
வீட்டுப்பாடம் எனக்கு
இரண்டாம்பாடம்தான்

மணவிலக்கு விதிமுறையை
மீறாமல்
நீதிமன்ற ஆணைவழி
நடக்கும் அம்மாவும் அப்பாவும்
கட்டொழுங்கைக் காக்கும்
சீலர்கள்

நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்ட
அப்பா அம்மாக்கிடையே
அப்படியொரு கரிசனம்

இந்தவாரம்
இந்தமாதம்
யாருடைய தரிசனம்?
அப்பாவா? அம்மாவா?
அட்டவணையைத்தான் பார்க்கவேண்டும்...!

லீவைஸ்
ஜியார்டனோ ஜீன்ஸ்கள்

லோட்டோ 
நைக்கி
அடிடாஸ் காலணிகள்

கோல்பர்
டிஸ்ஸோட்
வெஸ்ட்டார் கடிகாரங்களெல்லாம்
பிறந்தநாளுக்காய்
வெவ்வேறு நாள்களில்
பெற்றோரின் பரிசென்று
நண்பர்கள்
பேசிமகிந்தார்கள்

கட்டியும் காட்டியும்
இதயத்தின் நாவில்
ஆசை உமிழ்நீரை
ஊற்றெடுக்கவைத்தார்கள்

எனக்கும் பிறந்தநாள்
வருகிறது!
இப்போது எனக்கு
பரிசல்ல முக்கியம்...

அன்றைக்கு
அப்பாவா? அம்மாவா?


பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.