treeகாலையிலேயே
சுறுசுறுப்பாகிவிடும்
அந்த இடம்

ஒரு அடி உயரத்திற்கு
மண்குவித்து
கோணி பரப்பி
மூட்டைகளை ஆவெனத் திறந்து
வைத்துக் காத்திருப்பார்கள்

சனிமூலையோரம்
ஆடுமாடு
வாங்குபவர்கள்
துணிபோர்த்தி
விரல்களில் விலைபேசுவார்கள்

சந்தைமேடு செல்லும்
பாதையோரம்
கிளி ஜோசியக்காரன்
நான்கு சதுர அடியில்
ஆணி அடித்துத்
துணிச்சுவர் எழுப்பி
கூரையில்லா வீட்டில்
கிளி தரும் சீட்டில்
வெள்ளாமைக்கான எதிர்காலம் சொல்லி
காசுசேர்ப்பான் வீடுகட்ட

அத்தை வீட்டு
முருங்கைக்காயைத் திருடி
ரூபாய்க்கு இரண்டாய்
விற்று
ரெண்டாவது ஆட்டம்
பார்ப்போம்
மீனாட்சி கொட்டாயில்

அடுத்து
ஆடுமாடு வாங்க வருவோருக்காக
துண்டில் விலைபேசிய
தரகு ராமசாமி
சாராயம் குடித்து
சாய்ந்திருப்பான் ஆலமரத்தடி
பஸ்டேண்டில்

அன்றைக்கு மட்டும்
கூச்சல் கூடாக மூச்சிறைக்க
ஏரிக்கரை ஏறி இறங்கும்
எங்கள் ஊர் பஸ்

அடிக்கடி குறுக்கும்
நெடுக்குமாய் ஓடும் பஸ்
சாலையை கடக்க
விளக்கை எதிர்பார்த்துக் கிடக்கும்
பலருடன் சேர்ந்து கடக்க வேண்டியுள்ளது

அடையாளம் வைத்து
சென்ற வீடுகள்
ஓராண்டுக்குள்
அடுக்குமாடி குடியிருப்பாகின்றன

அரசமரம் ஆலமரம் புளியமரம்
இல்லாமல் வேகமாய் வளரும்
தூங்குமூஞ்சி மரங்களுக்கிடையில்
வாழும்போதும்
நினைவில் வந்து போகிறது
கருவாடு வாசனை
மாறாத
அந்தச் சந்தைமேடு


இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.