பூக்கள் நிரம்பிய கடல்பரப்பில்
நாசிக்கேங்கும் மணம்.
நாளையுடனொரு கண்ணாமூச்சி ஆட்டம்.
நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!
முறுக்கப்பட்ட உடல்களிலிருந்து
சொட்டுகிறது நீர்
பாலையிலும் பூக்கின்றன
வெண் மல்லிகைகள்.
வசிக்கும் கனவுகளிலிருந்து
வம்படியாக வெளியேற்றுகிறது
கடன் தீர்க்கக் கோரும் கடிதம்.
தூரத்தைக் குறைத்து
பாரத்தைக் கூட்டுகிற
தொலைபேசிகள் அறிவதில்லை
இன்னும் மீதமிருக்கின்றன
பேசப்படாத சொற்கள்.
- இப்னு ஹம்துன்