camels
உலாப் போகும் ஒட்டகங்களே - சற்று
உட்கார்ந்து செல்வதில்லையோ?
விலாப் பகுதி நொடிய நொடிய வியர்வை சிந்தும் எங்களுக்கு
விடிவு என்ன, சொல்வதில்லையோ?

பாலைவனக் கப்பல் அல்லவோ – நீங்கள்
பரிசுத்த மிருகம் அல்லவோ?
காலைமுதல் வேலை செய்து களைத்திருக்கும் எமைச் சுமக்கக்
கப்பல் ஒன்று தருவதில்லையோ?

கோடைகால வெய்யில் அல்லவோ – அந்தக்
கொடுமை நீங்கள் கண்டதல்லவோ?
பாடுபட்டுப் பாலைமண்ணைச் சோலையாக்கும் எங்கள் மீது
பரிவு காட்ட வேண்டுமல்லவோ?

கொண்ட தாகம் தீர்ப்பதல்லவோ – உங்கள்
குடல் அறைக்குள் வெள்ளமல்லவோ?
தொண்டையில் நீர் வரவழைத்துத் தாகம் ஆற்றும் உங்களுக்(கு) எம்
துயரம் மீது கவனம் இல்லையோ?

உழைப்பவர்க்கு வயிறு இல்லையோ – அவர்க்கும்
உணவு வேண்டும்: உண்மை இல்லையோ?
பிழைக்க வந்த ஏழையர்க்குப் பேசியதோர் கூலிதரப்
பிந்துவது தவறு அல்லவோ?

கனாக் கண்ட சவூதி அல்லவோ – கற்ற
கலையை நம்பி வந்ததல்லவோ?
வினாக் கேட்க வழியில்லாமல் அடிமையென்ற பொறியில் சிக்கி
விம்முவதோர் சோகமல்லவோ?

பாவம் இந்த வாழ்க்கை அல்லவோ – எங்கள்
பாஷை இங்கு மௌனம் அல்லவோ?
நாவறண்டு நாவறண்டு வாடிடினும், கேட்பதற்கு
நாதியற்ற கூட்டம் அல்லவோ?

வார்த்தையற்ற ஒட்டகங்களே – நீங்கள்
வாய்பேசா மடந்தைகள்தானோ?
வேர்த்த துளிகள் மண்ணின் மீது வீழுமுன்னே கூலிகொடா
வீணருக்கு மந்தைகள்தானோ?

ஊமையான பாலைக் கப்பல்காள் - உங்கள்
உடைமையாளர் இல்லம் செல்வீரோ?
தீமையான செயல்புரிந்தால் தெய்வம் நின்று கொல்லும் என்று
செய்கை மூலமேனும் சொல்வீரோ?

ஏழை ஊமை ஒட்டகங்களே – நீங்கள்
என்றாவது பேச மாட்டீரோ?
கோழைச் சின்னமான உங்கள் கூன்முதுகு நிமிர்ந்துகொள்ள,
கோல நடை போட மாட்டீரோ?

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It