நாற்காலி என்பது
இடுகுறி பெயரா?
காரணப் பெயரா?........
இலக்கண ஆசிரியர்
எழுப்பிடும் கேள்வி... ...!

காரணப்பெயர்தான்
காரணப் பெயர்தான்
காரணம் கேட்க
காதுகள் தாரீர்... ... !

ஊனம்
இருந்த இடத்தில் இருந்து
நகரவேண்டும்
இங்கே சக்கர நாற்காலி... ...!

அறுபது வயதைக் கடந்தால்
அரசு ஊழியர்க்கு
சாய்வு நாற்காலி... ...!

நாட்டைக் காலி செய்ய
நாட்டு மக்களே
கோட்டைக்குக் கொடுப்பது
பதவி நாற்காலி ... ...!

ஏழையர் பற்றி
எண்ணிப்பார்க்க
ஏ.சி அறையில்
எத்தனை நாற்காலி ... ...!

வட்ட மேசையில்
வயிறு இழுக்க
பெட்டிகள் பற்றிப்
பேசிடும் நாற்காலி ... ...!

காலை ... ... மாலை......
இரண்டு வேளையும்
மாத்திரைச் சீட்டு
எழுதிக் கொடுத்து
வெள்ளி வாங்கும்
மருத்துவ நாற்காலி ... ...!


டாக்டர் மா.வீ. தியாகராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It