Dry riverவறண்டுகிடக்கும் எம் அமராவதி ஆற்றின் நடுவே
உழவன் பறித்த ஊற்றொன்றில்
தூண்டில் போட்டுக் காத்திருக்கிறான் எம் சிறுவன்

கரைகள் விழுங்கிய காலமெல்லாம்
கதைகளாகிப் போனது
வெள்ளம் பாய்ந்த காலங்கள்
அன்றே மாய்ந்தது
ஓடையாய் சுருங்கி ஓடிய காலமும்
கானலாய் காய்ந்து போனது

நாரைகள் எல்லாம் போகிறபோக்கில்
குனிந்துபார்க்கும் குட்டையான காலம்கூட
மணல் அள்ளியபோது
மாட்டுவண்டி ஏறிப் போனது.

எம் ஆற்றின் தொண்டைக்குழியில்
ஆழ்துளை அமைத்துக்
குடிநீர் உறிஞ்சும் காலம் இது.

ஊரார் துணிகளை எல்லாம் வெளுத்த
பாறைகள் உறங்கிக் கிடக்க
எம் மக்களின் கோரைப் புல் கொல்லையில்
கழுவக்கூடத் தண்ணி இல்லை.

ஆற்றங்கரை கோயில் முனிகளெல்லாம்
தாகம் தீர்க்க
தேங்காய் தண்ணி பார்த்துக் கிடக்க
உழவன் மக்கள்
வட்டிக்கடை போகும் வழியில்
வற்றிப்போன கிணற்றை எட்டிப்பார்க்க நேரும்.

குத்தவைத்துக் காத்திருக்கும் எம் சிறுவன்
நம்பிக்கை இழந்து
சங்கு பொறுக்கித் திரும்பும் முன்
அவன் தூண்டிலில் சிக்கி
மேலே வரட்டும்
செத்துப் புதைந்த எம் நதி. 

சரவணன் ராமசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.