போலிகள்

Human face
தேன் தடவப்பட்ட
நாக்குகள்
புற்றில் கருநாகமாய்
வாய்க்குழியில்
நெளிந்து புரள்கின்றன
ஒவ்வொரு உச்சரிப்பும்
உயிர்களைப் பிடிப்பதற்காய் செல்லும்
பிசாசுகளைப்போல
வான வெளியில்
பரந்து செல்கிறது

அவர்களின்
கைகளில் இருந்து
வெள்ளைப் புறாக்கள்
பறக்கவிடப்படுகின்றன
அவற்றின் கால்கள்
இறுகக் கட்டப்பட்டிருக்கின்றன

அவர்களின் முகங்கள்
நொறுங்கி கீழே விழுகின்றன
அந்தக் கொடூரத்தைப்
பார்க்க முடியாது
கண்கள் ஒவ்வொன்றும்
ஒளி இழந்து போகிறது

அப்பாவிகளின்
கண்ணீர்க் கோடுகளை
கழுவுவதற்கு என்று
அவர்களின்
இரத்தம் கேட்கிறார்கள்

சமாதானத்திற்காய்
சண்டையிடுவதாய்
சொல்கிறார்கள் ??? ......

நிரந்தரம் இல்லா நிம்மதியில்......

அழகிய காட்டில்
ஆனந்தமாய் சிலமுயல்கள்
தங்கள் துணைகளுடன்
சல்லாபித்திருக்கின்றன

முயல் கூட்டங்களுக்குள் இருந்தும்
ஆட்டுக் கூட்டங்களுக்குள் இருந்தும்
மான்களைப் பிடிப்பதற்காய்
அந்தப் பயங்கர விலங்குகள்
செல்கின்றன
முயல்களையும் ஆடுகளையும்
அவை இப்போது
குறைவாகவே உண்கின்றன
இன்று அவற்றிற்கு
மான்களின் மாமிசம்
மிகவும் பிடித்திருக்கிறது

ஆட்டு குட்டிகளுக்கும்
முயல் குட்டிகளுக்கும்
இதுவே சுவர்க்கமாய் தெரிகிறது
சில நேரம்
மலைப் பாம்புகளும்
விசப் பாம்புகளும்
இந்தக் குட்டிகளை
தின்றுவிடுகின்றன

மான்களைப் பிடிக்க முடியயாது போனாலும்
அல்லது
அவை தின்று முடிக்கப்பட்டாலும்
அந்தக்கொடிய விலங்குகள்
பட்டினி கிடக்கப் போவதில்லை

கொடிய விலங்குகளின்
நிழல்களில்
சுவர்க்கம் காண்கின்றன
ஆட்டுக் குட்டிகள்.


செம்மதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.