கீற்றில் தேட...

கிளைபரப்பி, நிழல்விரித்து
கனியளித்து, பசிபோக்கி
புன்னகைப் பூக்களால்
அனைவருக்கும்
ஆசியளித்தபடியிருந்த
பெருமரம் ஒன்று
தன்னுடல் தானமளித்து
பின்னும் பரிணமித்தது

கட்டிலாக ஆனபோது
காதலின் கீதம் பாடியது.

தொட்டிலாக ஆனபோது
தாய்மையின் மொழி பேசியது.

நடைவண்டியான போது
இளங்கால்கள் சிலவற்றுக்கு
நடை கற்றுக்கொடுத்தது.

நாற்காலியானபோதோ
செருக்குடன் நிமிர்ந்து
செப்புமொழி சொன்னது.

மெலிந்த அந்த நான்கு கால்களுக்கு
முட்டுக்கொடுக்க பயன்பட்டன
மூலையிற் கிடந்த சில புத்தகங்கள்.

புத்தகங்களையே மிதித்திருப்பதாய்
புது கர்வம் கொண்ட
அதன் முதுகிலோ
அலங்கார ஓட்டை.

போகட்டும்,
புத்தகங்களினும்
நாற்காலிகள் நிரந்தரமானவையல்ல.