(நிலைமண்டில ஆசிரியப்பா)

தானெனும் எண்ணம் துயர்கொள் பொருதலாகி

வானில் துலங்கிடு வில்லை அழைத்ததாம்

முன்பகை அதனால் முழுதுயர் கொண்டேன்

என்பகை விலக்கிட ஏவுகணையாய் உருவுறுவாய்

என்றிட, அதுவும் எண்திசை வென்றிட

சென்று மடிந்தும் வென்று வெடித்தும்

தன்செயல் நாளும் தொடர்ந்ததாம் இங்கே!

     வெண்டுறை

மின்னாத நாள்மீனும் மிளிராத கோள்மீனும் வருந்தியே

மின்னஞ்சல் செய்தி அனுப்பின  

நின்னவர் நீள்வாழ்வு பெற்றிட

என்னரும் வில்லுக்கு எடுத்துரைப்பீர்!

குறட்டாழிசை

எதைச்சொல்ல எப்படிச் சொல்ல வெனமனம் உழன்று

பதைத்துப் புகன்றதைக் கேள்!

இன்னிசை வெண்பா

முடிவுரை என்றும் முடிவிலி அல்ல

முடிவது தெளிந்து முடிவதை ஏற்றால்

முடிகொண் பொருதல் முடிவினை எட்டும்

முடிவாய் மகிழ்வும் வரும்.

     (நிலைமண்டில ஆசிரியப்பா)

விளைந்த பகையோ விரைவாய் மடியும்

களைத்த நதிகள் களித்து ஆடிடும்

ஞாயிறு விரிதரு நாற்றிசை செம்மையால்

மயில்களும் ஆட மறந்து நின்றிடும்

தோகை விரியத் தென்றல் வீசிடும்

சாகை அதுவோ சிலிர்த்து நின்றிடும்

இறையின் மூச்சு இறங்கியே வந்ததாய்ப்

பறையைக் கொட்டியே பொழில்கள் இசைத்திடும்

முளைத்த இலையும் முகிழ்த்த அரும்பும்

வளைகோடு தன்னின் வாட்டம் விலக்கிடும்

கிள்ளையும் பிள்ளையும் கைகோர்த்து ஓடிட

கள்ளமில் இன்பம் கண்டிடும் அம்பனி

திண்ணமில் எண்ணம் தொடக்கிய கண்ணீர்

எண்ணத்தில் வண்ணத்தை எங்கிலும் பூசியே

போர்பகை  முடித்திடும் பாரோர் மகிழ்ந்திட

ஓர்ந்து இதனை ஓடிடு வில்லே!

- நாங்குநேரி வாசஸ்ரீ