கீற்றில் தேட...

பழைய நினைவுகளை
அழிக்கவும் வேண்டாம்
ஆக்கவும் வேண்டாம்
சிதறிய நெல்மணி அவைகளை
கொத்திப் போக
ஆளுக்கொரு
சிட்டுக்குருவி வளர்ப்போம்

*
யாரைக் காதலித்தாலும்
இப்போதெல்லாம்
என்னிடம் தான் சொல்கிறாய்
முன்பொருமுறை
என்னை காதலித்ததை
யாரிடமாவது
சொல்லியிருக்கிறாயா

*
மனிதர்களை
சுற்றி அமர வைத்துக்கொண்டு
கதை சொல்லலாம்
கவிதை ஆகாது
கதை ரூபத்தால் ஆனது
கவிதை அரூபத்தால் ஆனது

*
மேகத்தில்
கடல் கண்ட போது
தற்கொலை முனை
பசுமை பள்ளத்தாக்காய்
மாறி விட்டது
கம்பிவேலிக்குப் பின்
வாழும் நம்பிக்கை

*
இந்தப் பயணத்தில்
ஒரு தேவதையையும்
கண்டடையவில்லை
பாழாய் போன குளிர்
வண்ண வண்ண
ஸ்வெட்டர்களைத்தான்
காட்டியது

*
மஞ்சள் வெளிர் மஞ்சள்
நீலம் கருநீலம்
சிவப்பு அடர் சிவப்பு
அந்தி வானத்தில்
ஆடை அணிவகுப்போ

*
மரித்த பிறகு
உயிர்த்தெழச் செய்யும்
வார்த்தைகளை
எந்தப் பிணங்களும்
நம்புவதில்லை

*
வாழ்தலே
இறை என்பதை மறந்து
சாவுக்கு பயப்படும் மனிதனே
சதா சாமி கும்புடுகிறான்

- கவிஜி