கீற்றில் தேட...

கண்ணில்லாதவனும்
காலில்லாதவனும்
ஒரே நேரத்தில்
கை நீட்டுகிறார்கள்
யாருக்குத் தருவது
என் தயாள குணத்தை

*
வெற்றிடத்தை
காற்று மட்டுமல்ல
காகத்தின் அலகு
தவறவிட்ட
எலியும் நிரப்பும்

*
நான் அரசு வேலைக்குப்
போகவில்லை என்ற
அங்கலாய்ப்பு அப்பாவுக்கு
அக்கினிக் குஞ்சுகள்
ஆகாயத்தில் இருக்குமா
அரசுக் கட்டிடத்தில் இருக்குமா

*
முந்தி அடித்து
இடம் பிடிப்பது போலத் தெரியும்
கடைசி ஆளுக்கும்
இடம் கொடுத்து விடுவார்கள்
சாலைவாசிகள்

*
என்ன பயம் உன் கனவுக்கு
எதிர் வீட்டில் குடியிருப்பதாக
என்னைக் காட்டி இருக்கிறது
இனி உன் வீட்டில்
குடியிருப்பதாக காட்டச் சொல்
வெறுங்கனவு வண்ணக் கனவு
ஆக வேண்டாமா சொல்

*
அவர்கள் பேசும்
நான் இல்லை
என்னிடத்தில்
நான் பேசும்
அவர்கள் இல்லை
அவர்களிடத்தில்

*
நான் தேடிப் போகவும் இல்லை
அதுவாக
வந்தடையவும் இல்லை
கவிதை நிகழ்வது போல
கவிஞனும்
நிகழ்ந்திருக்கிறான்

- கவிஜி