தெருக்கோழிகளின் பழுப்பு நிற
சவ்வு கால்களுக்கு ஒப்பானவை
நம் மனங்கள்
எச்சிலின் மீது
நின்று கொண்டு
நட்சத்திரங்களைக் கொத்தி
விளையாடிக் கொண்டிருக்கும்
ஒரு பாடை போகும் போது
தாவிக் குதித்து அதிலேறி
தெரிந்த முகத்தின்
சாயல் தென்படுகிறதா என்று
பார்த்துவிட்டு குதிக்கும்
மேடையில்
மணமகனுக்கும் மணமகளுக்கும்
இடையில் நின்று
தோளில் கைபோட்டபடி
செல்பி எடுக்கும்
பூக்கத் தொடங்கியிருந்த
நேசத்தை கையோடு
பறித்து வந்து விடும்
நீண்டகாலம் பழகிய
நண்பனைப் போல
குழைந்திருக்கும் அது தான்
சட்டென்று நாம் எடுக்கும்
சிறு முடிவினில் காயம் பட்டு
மூர்க்கம் கொண்ட பிராணியாகி
நம் முகத்தை
கவ்விக் கொண்டு
ஓடி மறைந்து விடும்
கையறு நிலையில் நிற்கும் நாம்
பதிலுக்கு ஒரு முகத்தை
வார்த்தைகளால்
தயாரிக்க வேண்டும்
- தங்கேஸ்