1. நிதி நிலை

13 மாதங்கள் முடிந்தும்
பருவம் வராத கன்னுக்குட்டிக்கு,
மருத்துவர் சொன்ன
சத்துப் பவுடர் கலந்த தீனி.

13 வயது கடந்த
மகளுக்கு மெதுவாகவே
பருவம் வர வேண்டும் என
பாட்டி சொன்ன நாட்டுமருந்து.

இரு எதிர்பார்ப்புகளுக்கான
ஒரே வேண்டுதலாய்,
ஒரே நாணயத்தை
மஞ்சள் துணியில் கட்டினாள்
தாயம்மா.

2. எம்மதம்?

எல்லா யானைக்கும்
மதம் பிடிப்பதில்லை.

எப்போதாவது ஒருநாள்
அதன் விருப்பமின்றியே
மதம் தலைதூக்கும்.

கோயில் யானைக்கும்
ஒரு முறைதான்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்காமலே
யானையை மிஞ்சி
அட்டகாசம் செய்யும்
உயிரினங்கள் நிறைய!

மதம் பிடித்த யானை
பாவம்!

3. கனவைக் கலைக்காத உறக்கம்

கனவைக்
கலைக்காத
உறக்கம்.

உறக்கத்தைக்
கலைக்காத
கனவு.

வேறொன்றும் வேண்டேன்,
பராபரமே!

4. அற்புத விளக்கு

நீ என்
அற்புத விளக்கு.

உன் நினைவை உரசினால்
கவிதை பூதம் வந்து
கேட்காததையும் தருகிறது.

5. சர்வரோக நிவாரணி

உண்மைதான்
ரெம்டெசிவர் தேவையில்லை!

கொஞ்சும் காதலும்
விஞ்சும் கவிதையும்
இரண்டும் சேர்ந்தால்...
வேறு எது
சர்வரோக நிவாரணி?

6. கவிதையும் எளிது

காட்டிக்கொடுக்கும் கண்கள்,
கவிதைகளும் கொடுக்கும்.

நீ விழியில் பெயர்க்கிறாய்,
நான் மொழியில் பெயர்க்கிறேன்.

நீ பார்க்கிறாய்,
நான் பரப்புரை செய்கிறேன்.

கவிதை
எளிது!

7. 'செல்'ல ஆரம்பம்

தாலி கட்டி
அரை மணி நேரம் கூட ஆகவில்லை!

புதுப்பெண்ணும் புதுமாப்பிள்ளையும்
தன்னந்தனியே
அவரவர் ‘செல்’களை
நோண்டிக் கொண்டிருந்தனர்...

8. நீ ஒரு கவி(தை)-சுரபி

நீ ஒரு
கவி(தை)-சுரபி.

நான் வெறும் பரிமாறுபவன்
பசியாறிக்கொண்டே!

9. நொடியும் கவிஞனும்

அடிக்கடி
பிரசவிக்கிறான் கவிஞன்
அதனால் தான்
அவன் நொடிந்தே இருக்கிறான்.

10. இரும்பு இதயம்

ஒரு துளியேனும்
ஈரம் சேராவிட்டால்
துருப்பிடிக்காதா
இரும்பு இதயம்?

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.