கீற்றில் தேட...

எதிர் வீட்டு வாசல் நிறைய
பன்னீர் மரம் இருந்த இடத்தில்
இப்பொழுது ஒரு பால் வண்ண
டொயோட்டோ

காற்றில் கசியும் கஸல் போல
உள்ளத்தைப் பித்தாக்கும்
வெண்பூக்களின் வாசம்
இப்பொழுது
எந்த இடத்தில் அலைகிறதோ?

கிளைக்கொரு ஓவியமாக
கூடுவனைந்து
அடைந்திருந்த பறவைகள்
இப்போது எங்கே
அடைகின்றனவோ?

நாம் காலடிக்கும் கீழே
முன்னொரு காலத்தில்
ஓடிய நதிக்கு
சிதறிக் கிடக்கும்
மீன்களின் செதில்களும்
காலத்திற்குத் தப்பிய கூழாங்கற்களும்
சாட்சி என்றால்

நம் மூதாதையரோடு
கடவுள் நின்று
குசலம் விசாரித்துக்
கொண்டிருந்த இவ்விடத்தில்
எங்கே தேடி எங்கே கண்டடைவது
அவர் வந்துபோன சுவடுகளின்
அழியா தடயங்களை

- தங்கேஸ்