கீற்றில் தேட...

உன்னைக் கூர்ந்து நோக்கி சுட்டிக் காட்டி
உன் பெயரைப் பேசுபொருளாக்குகின்றனர்
ஆயிரம் தூற்றல்கள், புனையப்பட்ட பொய்கள்,
ஆதாரங்களற்ற கசப்பான புகார்கள்.
நிரூபிக்க எந்த வழியும் இல்லாத நிலையிலும்
உன் ஆன்மாவை அவர்கள்
கொழுந்து விட்டு எரியச் செய்கிறார்கள்.

உன் முகத்தில் நிழலைப் படர விடுகிறார்கள்
உண்மையைத் திரிக்கிறார்கள்,
உன் கம்பீரத்தைக் களவாடத் துடிக்கிறார்கள்.
உனது எந்த வாக்குமூலமும் துளைக்க இயலாதபடி
மூடிக் கொண்ட அவர்களது கடினமான செவிகளுக்குள்
உண்மையின் மெளனம் ஓயாமல் எதிரொலிக்கிறது.

செய்யாத பிழைக்கு, ஈட்டாமல் வந்து சேர்கிற
அவச்சொற்களைத் தாங்கிக் கொள்கிறாய்.
பாவங்களுக்கு நீ அந்நியமானவன் ஆயினும்
அவர்கள் தம் தவறுகளால் தமக்கு
விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொய்கள் மறைப்பதை காலம் கழுவிடும்
வெற்றுக் கூச்சல்கள் மெல்ல அடங்கிடும்
அதற்குள் பழிகளின் பாரம்
உனது முதுகெலும்பை வளைக்க முற்படும்.

அசத்தியங்கள் வெல்கின்ற மாய உலகில்
நிமிர்ந்து நிற்கின்ற உன்னை
அசைக்க முடியாமல் கடந்து செல்லும்
சந்தேகக் காற்றுகள் அறிவதில்லை,
உண்மைகள் ஆக்ரோஷமாக வெளிப்படுகையில்
ஆகாயத்தில் மையம் கொள்ளப் போகும் புயலை.

- ராமலக்ஷ்மி