கீற்றில் தேட...

இலையிலிருந்து கவிழ்க்கிறேன்
நதிக்குள் அப்பா

உண்மையில் மனிதர்கள்
பிண்டமாக வைப்பது
தங்கள் மனதுகளைத் தானோ ?

இந்தக் கணத்தில்
பிரிந்து செல்லும் நதியை
இனி எங்கே போய்
கைகளில் அள்ளுவேன்?

ஆவியாவது கொஞ்சம்
மேகமாவது கொஞ்சம்
வயலோடு போவது கொஞ்சம்
வற்றிப் போவது கொஞ்சம்
குளமாவதும் குட்டையாவதும்
கொஞ்சம் கொஞ்சம்
என்று போனால்
அடையாளமற்றுப் போகும் நதியில்
நான் எங்கே போய் தேடுவேன்
எலும்பின் எச்சங்களை?

அடடா
அழிவில்லாத கொடை
என்றல்லவா
நினைத்திருந்தேன் மனிதர்களை

ஆனால் கரையும் செல்களினால்
வரையப்பட்ட அரூப ஓவியங்களென்று
அவர்களைச் சொன்னால்
நான் எங்கே போய் தேடுவேன்
பௌதீக சான்றுகளை

- தங்கேஸ்