தேவைக்கு
தேவதையாகிறவளையும்
நேசிக்கும் வன்மம் எனதன்பு

*
வயிற்றைத் தள்ளிக் கொண்டு
போகும் நதியை
தலை வருடிக் கொடுக்கிறது பூங்காற்று

*
எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு நட்சத்திரம் முளைக்கும்
எழுத்துக்காரன் வானத்தில்

*
தன்னைத் தானே புகழவும்
தன்னைத் தானே இகழவும்
தெரிய வேண்டும் கலைஞனுக்கு

*
மயிலிறகு குட்டிபோடும்
என்றே நம்பு
மனச்சிறகு மடங்காதிருக்கட்டும்

*
வந்து மோதியா செல்கிறது
உன் சந்தம் வாங்கித்தானே செல்கிறது
இளங்காற்று

*
உன்னோடு பேசுவதற்குத் தான்
என்னோடே நாணுகிறது
என் காதல்

*
அழும் போதும் சிரிக்க
நீ கொஞ்சிய குழந்தைக்குத் தான்
தெரிந்திருக்கிறது

*
ஆங்காங்கே வண்டியை நிறுத்தி
புகைப்படம் எடுக்கிறாய்
காற்று கல்வெட்டு காலத்தில்

*
ஒருமுறை சொல்வதில் என்ன இருக்கிறது
ஓராயிரம் முறை சொல்லிப்
பார்ப்பதில் தானே காதல் இருக்கிறது

- கவிஜி

Pin It