சொனங்கிக் கிடந்த வானம்
சும்மா இருக்காமல்
தகரக்கூரை பொத்துப் போக
தடதடவென
வெளுத்துக் கட்டுகிறது..

சாரல் ஈரத்துக்குப் பயந்து
சாத்தி வைக்கிறேன் சன்னலையும்
கதவுகளையும் இறுக
திரைச்சீலை மூடிய வீடு
உள்ளே நான்.
வெளியே மழை

வேலையாய் வெளியே போயிருந்த
மகள் தொப்பலாய்
நனைந்து உள்ளே வருகிறாள்..
செம மழைம்மா
சிலிர்த்துக் கொள்கிறாள்

பின் நனைந்த
சுடிதாரின் முன் முனை சுருட்டி
இடது கையால் லாவகமாய்ப்
பிழிகிறாள் ஈரத்தை.
இப்போது வீட்டுக்குள்ளும்
கொஞ்சம் மழை.

- கலைச்செல்வி

Pin It