கன்னங்கள் காய்ந்த பின்னரும்
குறையவில்லை உதடுகளில்
உப்புச் சுவை.
ஏவாளுக்குதான் ஏற்பட்டிருக்க வேண்டும்
முதன் முதலில் கண்ணீர்.
ஏனெனில் ஆண்கள்
அழுது பார்த்ததில்லை அவள்
இன்றளவிலும்.
ஏனிந்தக் கண்ணீர் தனக்கு மட்டுமே
நிரந்தரம் என்றாயிற்று, வினவுகிறாள்
வீங்கியிருந்த விழிகளை
நிலைக்கண்ணாடியில் நோக்கியவள்.
இத்துணைக் கனத்த விழிகளைக் கொண்ட
தவளைகளோ
இங்கனம் மருளும் விழிகளைக் கொண்ட
மான்களோ அழுமா
தெரியவில்லை அவளுக்கு.
வாலைச் சுழற்றிச் சுழற்றி
குடுவைக்குள் சுற்றி வந்த மீன்கள்
ஒவ்வொன்றின் கண்களையும்
உற்றுப் பார்த்து
உறுதிபடுத்திக் கொள்கிறாள்:
ஆம்,
அவள் மட்டுமே சுமந்து திரிகிறாள்
ஒரு சொத்தினைப் போல
தன் சரீரத்திற்குள்
ஒரு மகா சமுத்திரத்தை!

- ராமலக்ஷ்மி

Pin It