யாரையாவது கொல்ல வேண்டுமென்று
நீங்கள் நினைத்துவிட்டால்
ஹலோ… நான் சொல்வதைக் கேளுங்கள்
உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு
இந்தக் கவிதையை ஒரு நிமிடம் படியுங்கள்

அவனைக் கொல்லாமலேயே
உங்கள் வேலையை நிறைவேற்றுவதற்கான
குறுக்கு வழிகள் நிறைய இருக்கின்றன
அதெல்லாம்
அடுத்தடுத்து என் கவிதைகளைப் படிக்கிறபோது
நீங்களே தெரிந்து கொள்வீர்கள்
முடிந்தால் என்னுடைய கவிதைப் புத்தகங்களை
வாங்கி அவனுக்குப் பரிசளித்து விடுங்கள்.

நீங்கள் குற்றவாளியாக மாறுவதைவிட
அவனைக் குற்றவாளியாக ஆக்குவதுதான்
புத்திசாலித்தனமானது.

நீங்கள் கொல்லாமல் விட்டதை
நினைத்து நினைத்தே
அவன் மருகிச் செத்தும் போவான்.

அவனது ஈமச் சடங்கின் தேதியை மட்டும்
உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருப்பவனை
முட்டாளாக்குவதற்கு,
சில முன் நிபந்தனைகள் உள்ளன.
அதிலொன்று,
அவனை
முட்டாளாகவே திரிய விடுவது
கடைசியில்
நீங்கள் நினைக்கிற இடத்திற்கு
அவனே வந்து சேர்ந்துவிடுவான்.

கடைசியாக ஒரு விஷயம்
அவனைக் கொல்ல வேண்டும் என்னும் எண்ணத்தைக்
கை விடுங்கள்.
விட்டு விட்டால்
அவனே ஒருநாள் செத்துத்தான் போகப் போகிறான்

- நா.வே.அருள்

Pin It