சிறு வயதில் எப்படியோ
பிடித்து விட்ட கிறுக்கு
காற்றில் காட்சி பிடிக்க
உள்ளங்கைகளை திரையாக்கி
நடப்பான்
உள்ளம் முழுவதும்
சினிமா என்றே துடிப்பான்
ஊருக்குள் நடந்தவன்
சினிமாக்களின் கூடாரம்
மெட்ராஸ்க்குப் பறந்தான்
ஒவ்வொரு திரை விரிகையிலும்
அது தனது என்றே நம்பினான்
நம்பிய காலத்தில் வேகம் அதிகம்
ஏனோ சரியான
திரை கிடைக்காமல் ஒளி பிறழ்ந்தான்
கனம் கூடிய வாழ்வில்
தன்னில் தானே தவழ்ந்தான்
ஊருக்குள்
டைரக்டர் தான் அடைமொழி
ஆனாலும் உள்ளம் சுரண்டுபவை
அதில் உள்ள பெரும் வலி
சிந்தனை சித்தனாக்கியது
தனிமை கத்தி அழும் குழந்தை ஆக்கியது
ஏதேதோ செய்து பார்த்தும்
கூடவில்லை சினிமாவில் ஜெயித்தல்
வாழ்ந்து பார்த்த கனவில்
மற்றோருக்குப் புரியாத தொடர் மரித்தல்
அவன் ஆடிய ரெக்கார்ட் டேன்ஸ்தான்
எனக்கு ஆட்டம் சொல்லித் தந்த மேடை
காதலிக்க
ஸ்டைலாக நிற்க
ஈர்க்கும்படி பார்க்க
ராஜ நடை நடக்க
என கற்றுத் தந்த
மினி திரையரங்கம் அவன்
தூரமாய் யோசித்தால்
என் சினிமா ஆசை கூட
அவன் காற்றில் விரித்த
கைகளில் பிறந்த சதுரம் தான்
மரித்த செய்தி வந்த போது
மௌனம் தான் மிச்சம்
சினிமா எத்தனை உயரமோ
அத்தனை ஆழம்
அறிந்த மனம் கவனத்தோடு
பறந்திருக்க வேண்டும்
கண்ணீரோடு பறந்து விட்டது
கண்ணீர் அஞ்சலியில்
ஊர் நண்பர்கள்
எழுதி இருந்தார்கள்
இருந்தாலும் இறந்தாலும்
ராஜா ராஜா தான்
சரி தான்
ராஜா எனும் ஓர் இயக்குனரின் திரை
எனக்குள் இன்னும் தீவிரமாக விரிகிறது

- கவிஜி

Pin It