அடைமழை
பூமியில் பூத்த புது மலர்களைத்
தழுவும் தீராத ஆசையில்தானோ
என்னவோ விடாது தொடர்கிறது...
விரிசல்களின் வழியே அழுகையாய்ப்
பொத்துக் கொண்டு நீர்த்தாரைகள்,
மண் வைத்து அடைத்தபின்
சிறுசிறு சொட்டுக்களாக
கீழே விழாது தாங்கக் காத்திருக்கும்
பாத்திரங்களில் வெவ்வேறு
ஓசைநயத்தோடு விழுந்து
நிறைந்து கொண்டிருக்கின்றன...
மழை பெய்ததால்
கொட்டிலாகிப் போன வீட்டில்
சோவென்று கேட்டுக் கொண்டிருக்கும்
மழைச் சத்தத்திற்கு நடுவே
பெரிய ஆட்டிடமிருந்து
ஈனுவதற்கான முனகல் சத்தம்...
ஆறாவது ஈத்தில்
ஐந்து குட்டிகளைப் போட்டு,
கொஞ்ச காலம் கூடுதலாகப்
பரிவு காட்டும் நல்வாய்ப்பை
வழங்கியிருந்தது அந்த ஆடு
அவ்வீட்டுக் குழந்தைகளுக்கு....

- சேனை தமிழன், திருச்சிராப்பள்ளி

Pin It