கட்டெறும்பு சாவதற்கெல்லாம்
காரணம் வேண்டுமா
எப்படியும் சற்று நேரத்தில்
செத்து விடும்
அச்சோ என கையை
அருகே கொண்டு சென்றாள்
பாதி நசுங்கிய உடலின்
கடைசி ஆசை
அந்த விரலைக் கடிப்பதைத் தவிர
வேறென்ன இருக்க முடியும்

*

திரும்பும் பக்கமெல்லாம்
புத்தகம் ஏந்தி நிற்கிறார்கள்
புத்திஜீவிகள்
குலை நடுங்குகிறான்
வாசகன்

*
வெகுதூரம் வந்தவனை
கடல் எனக் கொள்க
சிறு குச்சியை தக்கையாக்கி
நீரூஞ்சல் ஆடும்
தூரத்துப் பறவை எனவும் கொள்க

*
சரியாக ஐந்து மணி
அல்லது ஐந்து பத்து
வருகிறாள்
நிற்கிறாள்
பறிக்கிறாள்
சென்று விடுகிறாள்
வராத நாளில் விடுமுறை
கொள்கிறது
ஏழு நாட்களில் ஒன்று
எதிர் வீட்டு தோட்டச் செடியில்
பூக்களுக்குப் பதில் புண்கள் அன்று...!

*
எல்லா கோடுகளையும்
அழித்த பிறகு
ஏதோ உறுத்தல்
ஒரு சின்ன கோடு
இருந்து விட்டுப் போகட்டும்
மானுட பழக்கம்
கோடிழுத்து குணம் படைத்தது...!

- கவிஜி

Pin It