அந்த நிமிடம் வரை
அவள் என் தோழியே..!
மழையில் ஒரே குடை
மதியம் ஒரே உணவு
மாலையில் ஒரே பேருந்து
கைகளை பிடித்துக் கொண்டு தான்
எப்போதும் நடப்போம்
தோள் மேல் கை போட்டுதான்
எப்போதும் பேசுவாள்
மதிப்பெண் குறைந்தால்
தலையில் குட்டுவாள்
சேட்டை செய்தால்
நக விரலால் கிள்ளுவாள்
சண்டையில் கையைக் கூட நீட்டுவாள்
பேசாமல் ஒருநாளும் இருக்க மாட்டாள்
பேசாமல் போனாலும் விடமாட்டாள்
வீடு வேறு ஊர் ஒன்று
இனம் வேறு கூடம் ஒன்று
அந்த நாள் வரை...
அந்த நிமிடம் வரை...
அடிவயிற்றில் வலி என
வீட்டிற்குச் சென்றாள்
அஞ்சாறு நாள் கழித்து
மீண்டும் வந்தாள்
எப்போதும் போல
கை நீட்டினேன் நலம் விசாரிக்க
அப்போது தான் வெட்டப்பட்டது
அவள் மாட்டிவிட்ட
ஃபிரண்ட்ஸிப் பேன்ட் வலக்கை
தூரத்திலிருந்து ஒரு குரல்.
"நம்மாளு மகள வேறாளு மவே
தொட்டா விட்டுருவோமா"

 - அ.ஜோதிமணி, திண்டுக்கல்

Pin It