ஒன்று தொடர்பற்றுப் பேசுகிறீர்கள்
அல்லது பேசாமல் விடுகிறீர்கள்
மறைந்து பார்க்கிறீர்கள் அல்லது
மறைக்கப் பார்க்கிறீர்கள்
இருப்பதை இல்லையென்பது
கடினமென அறிந்தும்
இல்லாததை இருப்பதாக்கிக்
கொள்கிறீர்கள்
போலிகளின் முகப்பூச்சுக்கு
எத்தனை காலம் தான்
கண்ணாடி பிடிப்பது
கூட்டத்தில் அமர்ந்து
கை தட்டிக் கொண்டே
இருக்க வேண்டும் என்பது
எப்படி பொதுவுடைமை
பின்னிருந்து வருகிறவன்
பின்னாலயே வர வேண்டுவது
தர்க்கம் கூட இல்லையே
சிந்தனையின் வழியே
விடிவுக்கு நகர்வதை
வேடிக்கையாவது பார்க்கலாம்
பொருட்டில்லை என்பது போல
பரிதவிக்கிறீர்கள்
மறந்தும் ஒரு பாராட்டு சொல்லி விட
உங்கள் சிவந்த மனம்
ஒப்புக் கொள்வதில்லை
அதற்காக சேகுவேரா
எங்கள் தலைவன் இல்லையென்றா போகும்
தட்டும் வரை தட்டி விட்டு
எட்டி உதைக்கவும் தயங்குவதில்லை
யாம்
வேறு வழியில்லாத போது
எந்தக் கதவும் திறந்து தானே தீரும்...!

- கவிஜி

Pin It