சிற்றோடை பெரும் அருவி
பிறகு நதி என என் வனத்தில்
நானொரு இளங்காற்று

வரமென வந்து போகையிலே
குறுகுறுவென உடல் கூசும்
நானொரு இசை வேட்டு

இலை தொடுகையில் இசை சேர்க்கிறேன்
மரம் படுகையில் திசை கோர்க்கிறேன்
தாழப் பறக்கையில் தட்டான் கூட்டம்
தாவி திரிகையில் இளையராஜா பாட்டும்

புல்லின் மீதெல்லாம்
பனிக் கொங்கைகள் அசைப்பேன்
ஒற்றையடி உன்னதத்தில்
கால் பட்டிடாமல் விசைப்பேன்

இருள் போர்த்தி இனம் சேர்ப்பேன்
வெயில் பாய்ச்சி வனம் காப்பேன்
மயில் ஆட நிறம் வார்ப்பேன்
முயல் ஓட கரம் கோர்ப்பேன்

மேகம் பூசுகையில் காகமாய் பேசுவேன்
காகம் பேசுகையில் நாண காது கூசுவேன்
நதி தொட்டெழும் நங்கை கன்னம் நான்
இதழ் பட்டுதிரும் தங்க கிண்ணமும் தான்

படபடக்கும் சிறகில் எல்லாம்
பாட்டு கோர்க்கும் பருவம் நான்
கமகமக்கும் காட்டிலே
யானை வாலசைக்கும் கர்வம் நான்

ஈர மண்ணில் பாறை மின்னும்
காணும் கண்ணில் கானும் துள்ளும்
மேக கூட்டம் சேர்ந்து விட்டால்
என் மோகம் மோதி வானைத் தின்னும்

மெல்லென மேல் படர்ந்தேன்
உயிர் மூச்செல்லாம்
சில்லென சிலிர்த்தெழுந்தது

கணுக்கால் அற்ற காற்று தான்
ஆனாலும் உயிர் பூமிக்கே ஊற்று நான்

சவுக்கை மரங்கள் தவத்தில் இருக்க
சித்திரைப்பூக்கள் சிவந்து நிற்க
போதும் போதும் வெட்டி பேச்சு
இனி சிணுக் நடை தான்
இந்த சில் காற்றுக்கு மூச்சு...!

- கவிஜி

Pin It