குத்தவைக்கப்பட்டு
கால் கட்டப்பட்ட
கனவான் ஒருவன்
இன்னும் தேடிக் கொண்டிருக்கக் கூடும்
அத்தனை பெரிய கூட்டத்தில்
மனிதனை
o
சந்தனக் காப்புகளாலும்
தங்கக் கவசங்களாலும்
மறைக்கப் பட்டுள்ளது
கால் நீட்டிப் படுத்திருக்கும்
சுகவாசியின் கண்கள்
மனிதர்களின் பாவங்களிலிருந்தும்
பாவப்பட்ட மனிதர்களிடமிருந்தும்
o
கொல்லும் நோயொன்றுக்கு
குழலூதும் இசை ஞானியின்
அவதாரப் பெயர் வைத்தவன்
ஞானியாய் இருக்கவேண்டும்
அல்லது
நாத்திகனாய் இருக்க வேண்டும்
இருந்தாலும்
இரண்டும் ஒன்றுதான்.
o
முற்றும் துறந்து நின்றான்
ஆண்டியொருவன்
முழுதும் மறைத்துவைத்தான்
மனிதன் ஒருவன்.
எங்கும் நிறையும்
இவர்களிடம் தப்பி
ஏறி நிற்க மலை இல்லாமல்
அங்கேயே நிற்கிறான்
முழுதும் சுரண்டப்பட்டு.
o
எழுதுவதற்கு ஏதுமின்றி
தந்தம் ஒடித்து காவியம் எழுதிய
கரி கவி
கூகுள் இண்டிக் திறந்து
அமர்ந்திருக்கிறான்
காவியம்தான் இல்லை.
- லதாமகன் (