இரண்டு நாட்களாக
சிதறிக் கிடக்கின்றன
ரத்தக் கறைகளுடன் சில
வார்த்தைகள்.

ஹாலில் கொஞ்சம்
படுக்கையறையில் கொஞ்சம்
சமையலறையில் கொஞ்சம்

உன் மருந்தை நானும்
என் மருந்தை நீயும்
பத்திரமாக உள்ளே வைத்து
சாவியை சுயநினைவோடு
தொலைத்து விட்டோம்.

இப்போது
உனக்கும் எனக்கும் மத்தியில்
ஒரு தடித்த மௌனம்
கால் நீட்டி சாவகாசமாக
படுத்துள்ளது.

புறமுதுகைக் காட்டுவது
புறநானூறில் மன்னிக்க முடியாத
குற்றமாக இருக்கலாம்
அகநானூறில் அப்படியல்ல,
அறிவேன் நான்.

நினைவின் அடுக்குகளில்
சொறுகி வைத்திருந்த
காரணங்களை வேறு
காணவில்லை.
சரி போகட்டும்.
அதனால் என்ன
விட்டத்தைக் காலவரையின்றி
வெறித்துக் கொண்டிருக்கலாம்.

இப்போது எங்களை ஏளனமாகப்
பார்த்துவிட்டு பொறுமை
இழந்து கொண்டிருக்கும்
அந்த சுவர்பல்லிக்குத்
தெரிய வேண்டியதெல்லாம்
யார் உதட்டில் ஒளிந்துள்ளது
சண்டையை முடித்து வைக்கும்
அந்த அரை இன்ச் புன்னகை.

- நெல்சன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.