அரளி விதையைத் 
தின்றிறந்த செல்வியை
அரைகுறையாய்
மூன்று நாளில்
அரித்து ருசித்த எறும்புகள்
அவனது கனவுகளுக்குள்
மொய்க்கின்றன
யானைப் பசியோடு.

இடிந்த வீட்டிற்குள்
தன் மாமனையும்,
மூன்று குழந்தைக்காரியையும்
கள்வர்களாய்
அவன் பார்த்தான்.

கருப்பட்டி நீரால் நீராட்டப்பட்டு
எறும்புக் குழிகளின் மேல்
வீசப்பட்டான் தம் குடும்பத்தாரால்...
புகை பிடித்தான் என்ற
மாமனின் பொய்ப் புகாரால்.

மாமனின்
திருட்டுப் பாலியல் துய்ப்பு
வன்மமாய்...
அன்றிலிருந்து
அவனைக் கடித்துக் கொண்டிருக்கின்றன
இன்றும் எறும்புகளாய்.

*** 

துக்க நிறப் புகைப்படம்

கடுந்துயர் கொண்டு
கொடும் காற்றில் அலைகிறது...
மங்கல நாண் பூட்டிய
தாம்பத்யக் காலம்.

ஈரத்தடம் அற்றுப் போன
கண்களிலிருந்து
இடையறாது பீறிடுகிறது...
ரணம் ததும்பும்
இரவும், பகலும்.

வேனிற் காலங்களின் நிழல்
நீளும் போரொளியாய்
படரும் அந்தரங்கத்தின் முழுவதும்...
கண்ணீர் ஊற்றெடுக்க
புன்னகை வெதும்புகிறது.

சதைத் துணுக்குகளுக்குள்
யெளவனம்
சிதைந்து கிடக்க..
சிகரெட் புகை கூர்நகங்களும்
போதையின் கோரப் பற்களும்
சுமந்து வரும்
காலடி ஓசைகளை
நினைந்து.. நினைந்து..

தேய்ந்து கதறும் கதவுகளைப் போல
நடுங்கிக் கொண்டிருக்கிறாள்
அவள்.

- வசந்ததீபன்

Pin It