தோல்வியடையும் அந்தத் தருணத்திலேயே
எனை நிலைநிறுத்திப் போகிறாய்
முறிந்த கிளைகளை இரவலேந்தும் பறவையென
தொற்றியிருக்கிறேன் உன்னை
மனச்சடவுகள் பரிணமிக்கும் தருணம்
இல்லறத்தைப் புரிந்துணர்த்துதலில்
நீயே எஜமானியாய் மேலோங்கி
ஆளுமை செய்கிறாய்
எனதிருப்பில் நியாயங்கள்
இருப்பதை உணர்ந்திருந்தும்
சலிப்பூட்டக் கூடிய
கேட்டுக் கேட்டு
புளித்துப் போன வாதங்களென
எளிதாய் ஒதுக்கித் தள்ளுகிறாய்
என்னையும் என் கருத்துக்களையும்
சமாதானமின்றி நீ கட்டளையிடும் முடிவை
சமாதானத்தோடு உட்கிரகித்துப் போகிறேன்
ஒளிந்து கிடக்கிறது
உன் தோல்விகளனைத்தும்
என் சமாதானத்திற்குள்ளே…

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It