உதட்டில் சிரிப்பும்
உள்ளத்தில் நகங்களும்
மறைந்தே இருக்கும்
நேரத்துக்கொரு ஒரு கூட்டணி
நாளுக்கொரு ஒரு கூடென
கூடியிருந்தும் தனித்து யோசிக்கும்
கொடுக்கல் வாங்கல் பழகிய மிருகங்கள்
சொற்களுக்கு அலையும்
திருடும் உறவாடும் உருகும் உறுத்தும்
பட்டத்துக்கும் புகழுக்கும் உயிர் கூட வாங்கும்
புறணி பேசுவது தகுதியில் ஒன்றென கர்ஜிக்கும்
சந்திப்புகளில் நல்ல முகத்தில்
கட்டிக் கொண்டு நலம் விசாரிக்கும்
அன்றிரவே அகோரப் பசியில் இரை தேடும்
போட்டுக் கொடுத்தலும் போட்டு வாங்குதலும்
கூரிய ஆயுதங்கள்
பம்மி பார்த்துக் கொண்டே இருக்கும்
சமகாலத்து புஷ்டி மிருகத்தை
புதுக் கூட்டணியில் போட்டுத் தாக்கும்
கூட்டமாய் வேட்டைக்குச் செல்லும்
கூட்டத்திலும் வேட்டை நிகழ்த்தும்
யானை புலி கரடி சிங்கம் மான் பன்றி
காட்டுமாடு முயல் காட்டெலி
எல்லாவற்றுக்கும் பெயர் தான் வேறு
வாழ்வு நரியாகத்தான்
பசி கொண்ட மிருகங்கள்
பதுங்கி அலையும் முகநூல் காடு இது.....!

- யுத்தன்

Pin It