நையப்புடைக்க வேண்டாம்
நைசாக புடைக்க வேண்டும்
மேடைக்கு மேடை மஞ்சள் துண்டும்
மகராசர்கள் பேரில் விருதும்
உறுதி

நான்கு பேரைத் தெரிந்திருக்க
நாக்கு தள்ள படித்திருக்க
வேண்டியதில்லை
நாசூக்காக படித்தது போல
இருந்தால் போதும்

உள்ளூர் இலக்கியம்
உலக இலக்கியம்
ஒன்றும் உதவாது
ஊருக்கு உபதேசம் செய்து
உசுப்பேத்தி விடு

ரௌத்ரம் பழகுவது இருக்கட்டும்
அதற்கு முன்
எப்போதும் ம் கொட்டிப் பழகு
சிலபோது சேலை கட்டிப் பழகு

அப்பாவை சாகடி அம்மாவை மெச்சு
கிராமச் சாயம் பூசு
விவசாயத்தை உளறு
இலக்கியத் தரம் லைக் லைக்காய்
முகநூலில் உயரும்

நுனிப் புல் மேய்வோரும்
நோகாமல் நோம்பி கும்பிடலாம்
கும்புடு போடு
கொஞ்சம் கோயிந்தா போடு

எது எப்படியோ எரியும் ஊர் நடுவே
பிடில் வாசிக்கும்
இலக்கியக் கூட்டங்களில் எதிர் வாதமற்ற
தலையாட்டல் அற்புதம்

அது அப்படித்தான் என்று
ஒவ்வொரு ஞாயிறும்
ஒருக்களித்துக் கிடக்கிறது
ஊருக்கு ஊர் இலக்கிய சாவுகள்

தகுதி அற்றவை தப்பிப் பிழைக்கையில்
தகுதி உள்ளவை
தவித்துப் பிழைக்கிறது....!

- கவிஜி

Pin It