இன்பத்தின்
நிலையென நீடித்துப்போனது
நேற்றைய மழையின் வரவு
கோடை கக்கிய வெப்பத்தின் எரிச்சலில்
இறுக்கமும் புழுக்கமுமாய் மாறியிருந்தது என் வீடு
அநேக நேரம் விடாப்பிடியான தாகத்துடன்
இருப்பிடத்தை கிழித்தெறிந்து வெளியேறியது
அடைவிட்ட கோழிகளும்
அண்டவந்த சிறுபூச்சிகளும்

அமிலம் தீண்டிய தகதகப்பு
பாதசாரிகளின் கால்களை இரணமாக்கின
இளைப்பாறிப் போக
நகரத்து வீதிகளில் மரங்களில்லை
இராட்சத இயந்திரமேந்தி வெட்டியெறியப்பட்டிருந்தது
நவீனமயமாகும் நான்கு வழிச்சாலைகளுக்காய்

போதாகொறக்கி
நீர் சூழ்ந்த நிலங்களை
உறிஞ்சியெடுத்துவிட்டது
தனியார்மயம்

நாக்கு வறள
நெஞ்சுக்குழி அடைக்க
காலிக்குடங்களை கையிலேந்தி
தண்ணீருக்காய் ஏங்கித் தவித்த வேளையில்
சடசடவென கொட்டித் தீர்த்தது கோடைமழை
கைக்கொள்ளாமல் பெய்த மழையில்
மிகுந்த பிரயாசையுடன்
நனைந்துபோனது என் வீடு
இந்த கோடைமழை
இப்படித்தான் துவங்கியது

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It